அமெரிக்காவில் குழந்தைக்கு குடியுரிமை… நாடு கடத்தப்படும் தாயார் !

அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிய பெண், தனது 11 மாத குழந்தையை பிரிந்து நாடு கடத்தப்படும் சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளார். எல் சால்வடார் நாட்டைச் சேர்ந்த பெண் லெய்டி டியூனாஸ்-க்ளாரோஸ்(30). இவரது ஐந்து குழந்தைகளில் ஒன்று அமெரிக்க குடியுரிமை பெற்றுவிட்டது. இதனால், அமெரிக்க குடிமக்களுக்கான வழக்கப்படி தஞ்சம் கோரி, கடந்த மே மாதம் தனது 11 மாத பெண் குழந்தையுடன் இவர் அமெரிக்காவுக்கு வந்தார்.
ஆனால், சட்ட விரோதமாக நாட்டின் எல்லையை டியூனாஸ் கடந்ததாக அவரது குழந்தை பிரிக்கப்பட்டது. மேலும், அவரை நாடு கடத்தும்படியான தீர்மானத்தில் அமெரிக்கா உள்ளது. இந்நிலையில், தனது குழந்தையின் நிலையை எண்ணி தன்னுடன் சேர்த்துவையுங்கள் என டியூனாஸ் வழக்கு தொடர்ந்துள்ளார். ஏற்கனவே, தன் மீதான நாடு கடத்தும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என அமெரிக்க அரசிடம் டியூனாஸ் கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால், அவரது புகலிட கோரிக்கையே மறுபரிசீலனையில் தான் உள்ளது. கடந்த ஜூன் மாதம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், புலம்பெயரும் குடும்பங்களிலிருந்து குழந்தைகளை பிரிக்கக்கூடாது என்று சட்டம் இயற்றியிருந்தார். எனவே, டியூனாஸிற்கு சாதமான தீர்ப்பு வரும் என்று கூறப்படுகிறது. டியூனாஸின் வழக்கறிஞர் கூறுகையில், ‘நாட்டின் எல்லையைக் கடந்ததால் அவரும், அவரது குழந்தையும் பிரிக்கப்பட்டு விட்டனர்.
குழந்தையைப் பிரிந்த தாய் பாதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார். கடும் வேதனையை அனுபவித்து வருகிறார். பிரிவதற்கு முன் தாய்ப்பால் அருந்திக் கொண்டிருந்த பச்சிளம் குழந்தையை கட்டாயப்படுத்தி பிரித்ததன் காரணமாக, இவர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்’ என தெரிவித்துள்ளார்.