அமெரிக்காவில் சூறாவளி காற்றுடன் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பெரும் பாலான பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது. ! பசிபிக்கடலில் ஏற்பட்ட புயல் சூறாவளி புயலாக மாறி அமெரிக்காவின் ஹவாய் பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் அங்கு பலத்த காற்றுடன் மழை கொட்டுகிறது.
அதையடுத்து ஏற்பட்ட வெள்ளத்தால் தாழ்வான பகுதிகள் மற்றும் குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.பல இடங்களில் நிலச் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து பொது மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஹவாய் தீவில் பெரும் பாலான பகுதிகளில் சுமார் 3 அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கி நிற்கிறது. சூறாவளி காற்றுடன் தொடர்ந்து மழை கொட்டுவதால் பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.
இதற்கிடையே ஹவாய் பகுதியில் அதிபர் டிரம்ப் அவசரநிலை பிரகடனம் செய்துள்ளார். பாதிக்கப் பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் உடனடியாக கிடைக்க உத்தரவிட்டுள்ளார். அங்கு வாழும் மக்களுக்கு குடிநீர், உணவு, மருந்துகள் கிடைக்க ஹவாய் கவர்னர் டேவிட் இஜே நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.