News

அரசியல் உரிமையை தீர்மானிக்க தமிழர் தாயகத்தில் சர்வஜன வாக்கெடுப்பு!

இலங்கையில் ஓர் நிலையான அரசியல் தீர்வைக் காண்பதை நோக்காகக் கொண்டு, தமிழ் மக்களின் உரிமையைத் தீர்மானிப்பதற்கு, இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஐ.நா. சபையின் கண்காணிப்புடன் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும், ஐ.நா. சபையின் உறுப்பு நாடுகள் உதவ வேண்டும் என வடக்கு மாகாண அரசு, ஐ.நா. சபையைக் கோரும் தீர்மான வரைவு முன்வைக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபையின் 130ஆவது அமர்வு எதிர்வரும் 30ஆம் திகதி வியாழக்கிழமை, கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது. சபையின் அன்றைய அமர்வில் எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிகழ்ச்சி நிரலிலேயே மேற்படி தீர்மான வரைவு உள்ளடக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தால் இந்தத் தீர்மான வரைவு முன்வைக்கப்பட்டுள்ளது.

கடந்த கால ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானங்கள் மற்றும் ஐ.நா. சபையின் செயலர் நாயகத்தின் பொறுப்புக் கூறுதலுக்கான அறிக்கை, ஐ.நா.வின் உள்ளக மீளாய்வுக் குழுவின் அறிக்கை ஆகியவற்றை கவனத்தில் எடுத்தும், இலங்கையில் சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கு இடையிலான அரசியல் சிக்கலானது 1948 ஆம் ஆண்டு பெரிய பிரிட்டனிடமிருந்து இந்தத் தீவானது சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டதிலிருந்து சீரழிவுக்கு உட்பட்டுள்ளமையும், போரின் மூல காரணமாகிய அரசியல் சிக்கல் நிலையானது பல்வேறு முயற்சிகளின் பின்னரும் இதுவரையும் தீர்க்கப்படாததையும் கவனத்தில் எடுத்தும் வடக்கு மாகாண அரசு 5 தீர்மானங்களை எடுக்கவேண்டும் என்று சிவாஜிலிங்கம் சமர்ப்பித்துள்ள தீர்மான வரைவில் கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் தமிழ் மக்களுக்குச் சமத்துவமான அரசியல் தீர்வை வழங்குவதற்கு முடியாமையினாலும், விரும்பாமையினாலும், போருக்கான மூல காரணத்தை சமாளிக்கத் தவறியுள்ளமையாலும் அத்துடன் கடந்த கால வன்முறையின் மீள் எழுகையைத் தவிர்ப்பதன் பொருட்டு எந்தவொரு அர்த்தமுள்ள முயற்சியையும் முன்னெடுப்பதற்குத் தவறியுள்ளமையினாலும், ஓர் நிலையான அரசியல் தீர்வை காண்பதை நோக்காகக் கொண்டு தமிழ் மக்களின் அரசியல் வேணவாக்களைத் தீர்மானிப்பதன் பொருட்டு அந்தத் தீவின் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்புடன் கூடிய பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கு உதவுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளை இந்தச் சபை கோருகின்றது என்று 5 தீர்மானங்களுள் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top