News

அராஜகங்கள் மறந்துபோய்விடவில்லை – மீளவும் ஆட்சிபீடமேற துடிக்கும் ராஜபக்சாக்கள் -சிவமோகன் எம்.பி தெரிவிப்பு

ஒரு இனப்படுகொலை அப்பட்டமாக நிறைவேறிய நாளினை மறந்துவிட முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு – செஞ்சோலையில் உயிர் நீத்த மாணவர்களின் 12ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு வள்ளிபுனம் இடைக்காட்டு சந்தி பகுதியில் நேற்று இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு இனப்படுகொலை அப்பட்டமாக நிறைவேறிய நாளினை மறந்துவிட முடியாது. இதனை உலகிற்கு ஆண்டு தோறும் சுட்டிக்காட்டுகின்றோம். அதனால்தான் இந்த நினைவு நிகழ்வினை நடத்துகின்றோம்.எம்முடன் இருந்த உறவுகளை நினைத்து நினைவேந்தல் செய்ய எமக்கு அருகதை இல்லை என்று சொன்னால் இந்த மண்ணில் நாங்கள் வாழ்வதற்கு அருகதையற்றவர்களாக போய்விடுவோம்.

இதற்காக எந்தப்பெரிய ஒரு சவாலையும் எதிர்கொள்ள நினைத்துதான் இந்த நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருக்கின்றோம்.

இனப்படுகொலை செய்யப்பட்ட இந்த நாளினை உலகுக்கு வெளிக்கொணர்ந்து எமது இனம் விடுதலையை நோக்கி மேற்கொள்ளும் பயணத்தில் கைகோர்க்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

இன்று ராஜபக்சர்கள் மீண்டும் ஒருமுறை அரசாட்சியை பிடிக்கும் நோக்கில் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் செய்த அராஜகங்கள் எமக்கு மறந்துபோய்விடவில்லை.

இவ்வாறான நினைவேந்தல் நிகழ்வுகளை மகிந்த ஆட்சியில் செய்திருந்தால் பலர் வெள்ளைவான்களில் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டிருப்பார்கள் என குறிப்பிட்டார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top