News

அளித்த வாக்குறுதிகளில் ஒன்றையேனும் அரசு நிறைவேற்றவில்லை, பொதுநலவாய செயலாளரிடம் சம்பந்தன்.

நாட்டில் அமைதியையும் சமாதானத்தையும் நிலைபெறச் செய்வதற்குரிய காத்திரமான நடவடிக்கைகள் எதனையும் அரசு மேற்கொள்வதாகத் தெரியவில்லையெனவும் இந்த அரசு அளித்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட பூரணப்படுத்தத் தவறியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் த​லைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கத்திடமிருந்து நிறைய எதிர்பார்த்தோம். ஆனால் திருப்தி தரக்கூடிய வகையில் எதுவுமே நடக்கவில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பொதுநலவாய செயலாளர் நாயகம் பட்ரிஸியாஸ் காட்லாண்ட் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை நேற்று பாராளுமன்றிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பின் போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் செயலாளர்நாயகத்தை தெளிவுபடுத்திய இரா. சம்பந்தன், ஆயுதபோராட்டம் முற்றுபெற்றிருந்தாலும் முழுமையான அமைதியும் சமாதானமும் மக்களிடையே இல்லை என்பதனை சுட்டிக்காட்டினார். மேலும் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததும் மக்கள் குறிப்பாக சிறுபான்மை மக்கள் மத்தியில் பாரிய எதிர்பார்ப்புக்கள் காணப்பட்டன. அரசாங்கம் சர்வதேசமட்டத்திலும் நாட்டுமக்களிற்கும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் என அவர்கள் எதிர்பார்த்தார்கள், பிராந்தியங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் வகையில் அரசாங்க கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு புதிய அரசியல்யாப்பு, உண்மை மற்றும் நீதியை நிலைநாட்டுதல், நஷ்டஈடு, காணாமல்ஆக்கப்பட்டோர் தொடர்பிலான விசாரணைகள், படையினர் கைவசமுள்ள பொதுமக்களின் காணிவிடுவிப்பு, மிகக்கடுமையான பயங்கரவாத தடுப்புசட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் விடுதலை, போன்றன அவ்வாறான வாக்குறுதிகளில் சிலவாகும்.

எனினும் இவைதொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லையெனவும் வலியுறுத்தினார்.

புதிய அரசியல் யாப்பினை உருவாக்குவதிலும் இத்தகையான ஒரு பொருத்தனை உள்ளதனை வலியுறுத்திய எதிர்க்கட்சித்தலைவர், புதிய அரசியல் யாப்பினை உருவாக்கும் பிரேரணையானது பாராளுமன்றில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது, ஆனால் ஒருசில அரசியல் காரணங்களின் நிமித்தம் இதனை முன்னெடுத்து செல்வதில் அரசாங்கதரப்பில் தாமதங்கள் காணப்படுகின்றது எனவும் தெரிவித்தார்.

இந்த நாடு பாரிய யுத்தம் ஒன்றிற்கு முகம்கொடுத்தமைக்கு காரணங்கள் உள்ளன என்பதனை சுட்டிக்காட்டிய கூட்டமைப்பின் தலைவர், ஒருவர் உறுதியாக இல்லாதவிடத்து இப்பிரச்சினையை கையாளமுடியாது என்றும், கடும்போக்காளர்களின் நடவடிக்கைகளுக்கு அஞ்சி இவற்றினை ஒருவர் கைவிடமுடியாது என்றும் கூறினார்.

இலங்கையில் ஜனநாயக மேம்பாடு, சட்டஒழுங்கு, நல்லாட்சி, மற்றும் சூழல் மாசடைதலை தவிர்த்தல் உள்ளடங்கலான பலவிடயங்களில் பொதுநலவாய செயலகத்தின் பங்களிப்பு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரை தெளிவுபடுத்திய செயலாளர்நாயகம், புதிய அரசியல்யாப்பு உருவாக்கத்திற்கு தமது பணியகம் தொடர்ச்சியான பங்களிப்பினை வழங்கும் எனவும் தெரிவித்தார். மேலும் மிதமான தமது செயல்களின் மூலம் சமாதானத்திற்கான ஒரு தூதுவராக இரா. சம்பந்தன் இருப்பதனையும் செயலாளர்நாயகம் பாராட்டினார்.

இந்த நாட்டில் நிரந்தரமான அமைதியையும் சமாதானத்தினையும் ஏற்படுத்துவதற்கு தனது முழுமையான பங்களிப்பு இருக்கும் என்பதனை வலியுறுத்திய இரா.சம்பந்தன் பொதுநலவாயம் உள்ளடங்கலான சர்வதேச சமூகத்திற்கும் இலங்கையில் நிரந்தர சமாதானத்தினை நிலைநாட்டுவதில் பங்குண்டு என்பதனையும் வலியுறுத்தினார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top