ஆசிய விளையாட்டு போட்டிக்கு இடையூறு ஏற்படுத்திய 77 குற்றவாளிகள் சுட்டுக்கொலை!

ஆசிய விளையாட்டு போட்டியில் இடையூறு ஏற்படுத்துவார்கள் என கருதி இந்தோனேசியாவில் 77 குற்றவாளிகளை பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர்.
இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தா மற்றும் தெற்கு சுமத்ராவில் உள்ள பலம்பாங் ஆகிய நகரங்களில் இன்று ஆசிய விளையாட்டு போட்டிகள் ஆரம்பமாகின்றன.
குறித்த போட்டிகள் அடுத்த மாதம் 2 ஆம் திகதி வரை இடம்பெரவுள்ளது.. 2 வாரங்கள் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டியில் ஆசிய நாடுகளை சேர்ந்த 17 ஆயிரம் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். போட்டியை காண ஏராளமான ரசிகர்களும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் குவிந்துள்ளனர். இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 1 இலட்சம் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்தோனேசியாவில் 77 குற்றவாளிகள் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும். பலர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் ஆசிய விளையாட்டு போட்டியில் இடையூறு ஏற்படுத்துவார்கள் என கருதி இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சமூகநல ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இவர்கள் அனைவரும் ஜேப்படி மற்றும் வழிப்பறி போன்ற சிறிய தவறுகளை செய்பவர்கள் என தெரிவித்துள்ளனர். முதலில் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு பின்னர் விசாரணை நடத்தப்பட்டது எனவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் முதல் பொலிஸார் இத்தகைய நடவடிக்கையை தொடங்கினர். ஜூலை மாதத்தில் தான் அதிகம்பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மேலும் 5 ஆயிரம்பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு. 700 க்கும் மேற்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.