ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத ஒழிப்பு வேட்டையில் 51 தலிபான்கள் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் குனார் மாகாணத்தில் உள்ள பயங்கரவாதிகளின் பதுங்குமிடங்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 51 தலிபான்கள் கொல்லப்பட்டனர்
ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள பக்கிட்டா மாகாணத்துக்கு உட்பட்ட கார்டெஸ் நகரில் உள்ள ஷியா மசூதி ஒன்றில் நேற்று ஜும்மா (வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு) தொழுகையின்போது பயங்கரவாதிகள் நடத்திய மனித குண்டு தாக்குதலில் 48 பேர் உயிரிழந்தனர்.
இதற்கு பழி வாங்கும் நடவடிக்கையாக குனார் மாகாணத்தில் உள்ள பயங்கரவாதிகளின் பதுங்குமிடங்கள் மீது விமானப்படை துணையுடன் பாதுகாப்பு படையினர் நேற்றிரவு முதல் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தாக்குதலில் 51 தலிபான்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அவர்களின் பதுங்குமிடங்களும், ஆயுத கிடங்குகளும் அழிக்கப்பட்டன.
கொல்லப்பட்டவர்களில் அஸ்மார் மாவட்டத்தின் தலிபான் ராணுவ தளபதிகள் சுல்தான் முஹம்மத், மவுலவி ஹஸ்ரத் அலி மற்றும் காசியாபாத் மாவட்ட தலிபான் ராணுவ தளபதி மவுலவி இம்ரான் காஸி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் என்றும் தொடர்ந்து அங்கு தாக்குதல் நடந்து வருவதாகவும் ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.