ஆப்கானிஸ்தானில் ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தி கைப்பற்றிய தலிபான்கள் – 14 வீரர்கள் பலி!

ஆப்கானிஸ்தான் நாட்டின் பர்யாப் மாகாணத்தில் உள்ள ராணுவ முகாமை கைப்பற்ற தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய அதிரடி தாக்குதலில் 14 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் முகாமிட்டிருந்த அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் கடந்த 2014-ம் ஆண்டு முற்றிலுமாக வெளியேறிய பின்னர் அங்கு ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் அந்நாட்டின் மேலும் பல நகரங்களை கைப்பற்றும் நோக்கத்தில் சமீபமாலமாக ஆவேச தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
நாட்டின் தென்கிழக்கு பகுதியில் தலைநகர் காபுலில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கஸ்னி நகரை கைப்பற்றும் நோக்கத்தில் முற்றுகையிட்ட தலிபான்களுக்கு அரசு படையினருக்கும் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற மோதல்களில் இருதரப்பிலும் பலர் உயிரிழந்துள்ளனர். அந்நகரம் தலிபான்கள் கையில் சிக்காமல் தடுக்கும் வகையில் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு படையினர் சண்டையிட்டு வருகின்றனர். கூடுதலாக ராணுவப்படைகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அந்நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ஃபர்யாப் மாகாணம், கோர்மாச் மாவட்டத்தில் உள்ள செனயா என்ற ராணுவ தளத்தின்மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை தலிபான் பயங்கரவாதிகள் அதிரடியாக தாக்குதல் நடத்தினர்.
அப்போது அங்கு சுமார் 100 ராணுவ வீரர்கள் இருந்ததாக தெரிகிறது. இருதரப்பினருக்கும் விடிய, விடிய நடந்த மோதலில் 14 ராணுவ வீரர்களை சுட்டுக் கொன்ற தலிபான்கள் சுமார் 40 வீரர்களை சிறைபிடித்து அந்த ராணுவ தளத்தை கைப்பற்றி விட்டதாக ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன. மீதியிருந்த ராணுவ வீரர்கள் உயிர் பயத்தில் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.