இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 347என அதிகரிப்பு !

இந்தோனிசியாவை கடந்த ஞாயிற்றுக்கிழமை உலுக்கிய நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 347 என அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தோனேசியாவின் பாலி மற்றும் லம்போக் தீவுகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் 7 என பதிவானது. இதன் தாக்கம் கிழக்கு மற்றும் வடக்கு பாலி, கிழக்கு ஜாவா, தென்கிழக்கு மடுரா, தெற்கு கலிமண்டன், தெற்கு சுலவேசி ஆகிய இதர பகுதிகளில் கடுமையாக உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கம் பல வினாடிகள் நீடித்தது. அந்த நிலநடுக்கத்தால், பல பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், கட்டிடங்கள், வளாகங்கள் இடிந்தன. இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 347 ஆக அதிகரித்துள்ளது என உள்ளூர் தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் வடக்கு லம்போக் பகுதியில் இருந்து வெளியான அறிக்கை ஒன்று மரண எண்ணிக்கை 226 முதல் 381 என இருக்கலாம் என்று தகவல் வெளியிட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கத்தில் சிக்கி, 1,400-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த விபத்தில் 1,65,000 பேர் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டனர். மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலா தலங்களை மறு சீரமைப்பு செய்வதில் கால தாமதமாகலாம் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.