இனியும் பொறுமையுடன் இருக்க முடியாது! – பிரித்தானிய தூதரக அதிகாரியிடம் மாவை.

அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை. நாங்கள் இனியும் பொறுமையுடன் இருக்க முடியாது என்று யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்ட பிரித்தானிய தூதரக அரசியல் தலைமை அதிகாரி நீல் கவானாக்கிடம், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் பிரித்தானிய தூதரக அதிகாரி என்னிடம் கேட்டபோது மாகாண சபைத் தேர்தல் இடம்பெறவேண்டும். ஆனால் மாகாண சபைத் தேர்தலுக்கான தேர்தல் முறைமை எவ்வாறு இருக்கவேண்டும் என்பதில் சரியான தீர்வு இன்னும் எட்டப்படவில்லை.
எதிர்வரும் 24 ஆம் திகதியே அதற்கான தீர்வு எடுக்கப்படவுள்ளது. ஆனால் புதிய தேர்தல் முறையில் தேர்தல் நடைபெறும் என்பது சாத்தியமற்ற விடயமாகும். குறிப்பாக மாகாண சபை எல்லை முறைமைகள் தொடர்பில் சிறுபான்மை இன மக்களுக்கு பாதகமான நிலையே காணப்படுகின்றது. எல்லை நிர்ணய குழுவின் அறிக்கையை சிறுபான்மை கட்சிகள் எதிர்த்துள்ளன.
சிறுபான்மைத் தமிழ்க் கட்சிகள், முஸ்லிம் கட்சிகள், மலையகத் தமிழ்க் கட்சிகள் எதிராகவே இருக்கின்றன. இது மட்டுமன்றி ஐக்கிய தேசியக் கட்சி , சிறிலங்கா சுதந்திரக் கட்சி போன்றவையும் இதற்கு எதிரான நிலைப்பாட்டிலேயே உள்ளன இது எவ்வாறு இருப்பினும் பழைய முறைமையின் படி நடக்கவே விருப்பம் கொண்டுள்ளன என்று எடுத்துக்கூறினேன்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தேர்தல் நேரங்களில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா? மக்கள் மத்தியில் அது எவ்வாறு உள்ளது என்பது தொடர்பில் அவர் கேட்டபோது.
ஜனாதிபதித் தேர்தலிலும் சரி பாராளுமன்ற தேர்தலும் சரி வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக அரசியல் தீர்வு காணப்படவேண்டும் என்பது தொடர்பில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த அரசியல் தீர்வு முழுமையாக எவ்வாறு வரும் என்பது தொடர்பில் தெளிவான முடிவு என்னும் கிடைக்கவில்லை. ஆனால் அதிகாரங்களைப் பகிர்கின்ற விடயத்தில் பரவலான இணக்கம் காணப்படுகின்றது.
இடைக்கால அறிக்கையை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜ பக்சவும் சிங்களத் தீவிரவாத அமைப்பினரும் எதிர்க்கின்றனர். இந்த அரசியல் அமைப்பு நாட்டைப் பிளவு படுத்தப்போவதாக கூறி வருகின்றார்கள். அதேபோன்று எங்கள் பக்கத்திலுள்ள ஒரு சிலரும் அதனை நிராகரிக்கின்ற கருத்துக்களை முன்வைத்துள்ளனர். ஆனால் அதிகாரங்களை பகிரக்கூடிய ஒரு இணக்கப்பாடு இன்றுவரைக்கும் இருந்து வருகின்றது.
குறிப்பாக இலங்கையில் உள்ள ஏழு முதலமைச்சர்கள் அதிகாரம் பரவலாக்கப்படவேண்டும் என்ற ஒரு இணக்கத்துக்கு வந்துள்ள நிலையில் பாராளுமன்றம் அரசியல் அமைப்புக் குழுவாக மாற்றப்பட்டு இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த அரசியல் அமைப்பை ஒரு குறிப்பிட்டகால எல்லைக்குள் வெளியிட வேண்டும். இதற்கான சூழல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தீர்வு வரும் என நாங்கள் தொடர்ந்தும் பேசிக்கொண்டிருப்பதைவிட அரசியல் அமைப்பிற்கான வழிநடத்தல் குழு இணக்கம் காணப்பட்ட விடயங்களை வெளியிடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
நாங்கள் இனியும் பொறுத்துக் கொண்டிருப்பது நன்றல்ல. சர்வதேச சமூகம் இதற்கான முயற்சிகளுக்கு அழுத்தங்களை கொடுக்கவேண்டும். இவ்வாறாக சிறந்த அரசியல் அமைப்பினை நாங்கள் உருவாக்கமுடியாது விட்டால் நாங்களும் சர்வதேச சமூகமும் இதற்கான மாற்று வழிகளை தீர்மானிக்கவேண்டியவர்களாக இருக்கின்றோம் என்று சுட்டிக்காட்டினேன்.
இதேவேளை வடக்கு மாகாண சபை தொடர்பில் கேட்டபோது, வடக்கு மாகாண சபை உருவாக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. எனினும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்ட பல விடயங்கள் நிறைவேற்றப்படவில்லை. கூட்டமைப்பு மாகாண சபையில் ஆளுங்கட்சியாக உள்ளபோதும் அது செயலற்றதாகத்தான் காணப்படுகின்றது. தீர்மானங்கள் நிறைவேற்றுவதாகவே இருக்கின்றது. மக்களுக்கான சேவையினை செய்யவில்லை. அரசியல் தீர்வு மற்றும் போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அடிப்படைத்தேவைகளை அடையாளம் காணுதல், வேலைவாய்ப்புக்களை உருவாக்குதல், வாழ்வாதார உதவித் திட்டங்கள் அடையாளப்படுத்துதல் போன்ற விடயங்களில் மாகாண சபை முறையாக செயற்படவில்லை.
அதேபோன்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை. ஆனால் எதையுமே நிறைவேற்ற வில்லை என்று கூறமுடியாது. எம்மை விமர்சிப்பவர்களும் மாற்று வழி என்ன என்பதை தெளிவாகக் குறிப்பிடாதவர்களாக உள்ளார்கள். மக்களுக்கு எங்கள்மீது விமர்சனங்கள் இருக்கின்றவே தவிர எம்மீது நம்பிக்கை இழந்துள்ளதாகக் குறிப்பிடமாட்டோம். மாகாண சபையினால் எதிர்பார்க்கப்பட்ட விடயங்கள் செயற்படுத்தப்படவில்லை என்பது அனைவருக்கும் தெரியும் என்று எடுத்துக்கூறினேன்.
அடுத்த மாகாண சபை தொடர்பில் கேட்டபோது, அரசியல் தீர்வைக் காண்பதற்கும் அழிந்த தேசத்தினைக் கட்டியெழுப்புவதற்கும். மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் போட்டியிடுவோம். மக்கள் மத்தியில் விமர்சனங்கள் இருந்தாலும் ஒரு சில விடயங்கள் நடைபெற்றுள்ளன. குறிப்பாக நில விடுவிப்புக்கள் வீட்டுத் திட்டங்கள் போன்றவை இடம்பெற்று வருகின்றன. ஆனால் அரசாங்கம் எங்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை இதன்காரணமாகவும் மக்கள் மத்தியில் விமர்சனங்கள் இருக்கின்றன என்று சுட்டிக்காட்டினேன்.
மேலும் புலம்பெயர் நாடுகளில் வாழும் மக்களின் முயற்சிகள் எவ்வாறு உள்ளன என்பது தொடர்பில் கேட்டபோது, புலம்பெயர்ந்து வாழும் மக்களும் முதலீடுகளைச் செய்வதற்கு ஆர்வமாகவுள்ளனர். அதற்கு அரசாங்கமும் சர்வதேச சமூகமும் வாய்ப்புக்களை உருவாக்கும் சூழலை ஏற்படுத்தவேண்டும். பிரித்தானியாவும் எமக்கான உதவிகளை செய்யவேண்டும். மேலும் ஜெனீவா மனித உரிமைகள் தீர்மானத்தில் நிறைவேற்றப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு சர்வதேச நாடுகள் தொடர்ச்சியான அழுத்தங்களை பிரயோகித்து அதனைநடைமுறைப்படுத்தவேண்டும் எனவும் நான் எடுத்துக் கூறினேன் என்றார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தின் அரசியல் தலைமை அதிகாரி நீல் கவானாக் மாவை சேனாதிராஜா எம்.பி.யைச் சந்தித்து யாழ்.திருநெல்வேலியிலுள்ள விடுதியில் தற்போதைய அரசியல் நிலைமைகள், மாகாண சபைத் தேர்தல், தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும் மக்களுக்கும் இடையிலான தொடர்புகள் தொடர்பில் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.