இயல்புநிலைக்கு திரும்பிவரும் கேரளாவுக்கு மீண்டும் மழை எச்சரிக்கை!

திருவனந்தபுரம்: கேரளாவை உலுக்கிய பேய் மழையால் இந்த ஆண்டு ஓணம் கொண்டாட்டம் களையிழந்து காணப்படுகிறது. இருப்பினும் நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்கள் எளிமையாக கொண்டாடினர். இதற்கிடையே, கேரளாவுக்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர். ஓணம் பண்டிகை, கேரளாவின் மிக முக்கியமான பண்டிகை. இது கேரளாவில் வசந்த விழாவாக கொண்டாடப்படுகிறது. பண்டைய காலத்தில் கேரளாவை செழிப்பாக ஆண்ட மாவேலி மன்னனின் நினைவாக இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. மக்கள் செழிப்புடன் உள்ளார்களா என்பதை பார்ப்பதற்காக ஒவ்வொரு வீட்டிற்கும் மாவேலி மன்னன் வருவதாக ஐதீகம். அப்போது மன்னனை வரவேற்பதற்காக அனைத்து வீடுகளிலும் அத்தப்பூ, பூக்கோலம் இடுகின்றனர்.
மலையாளிகள் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் ஓணப்பண்டிகை பாரம்பரிய முறையில் கொண்டாடுவதை கைவிடுவதில்லை. ஆனால் இவ்வருடம் கேரளாவை உலுக்கிய பேய் மழை வெள்ளப்பெருக்கு காரணமாக ஓணம் பண்டிகை முற்றிலுமாக களையிழந்து உள்ளது. ஏற்கனவே ஓணம் பண்டிகை கொண்டாட்டங்களை கேரள அரசு ரத்து செய்துள்ளது. வருடந்தோறும் ஓணத்தை முன்னிட்டு கேரள அரசு சுற்றுலாத்துறை சார்பில் ஒரு வாரம் ஓணம் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை அனைத்து மாவட்டங்களிலும் அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
இவை அனைத்தும் இந்த வருடம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் ஓணம் கொண்டாட்டத்திற்காக பல்வேறு துறைகளுக்கும் ஒதுக்கிய பணம் முழுவதும் வெள்ள நிவாரண நிதியில் சேர்க்கப்பட்டுள்ளது. ஓணம் கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்ட போதிலும் பெரும்பாலான நிவாரண முகாம்களில் தங்களது சோகத்தை மறந்து அனைவரும் பூக்கோலமிட்டு ஓணக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதுதான் உண்மையான ஓணம் என்றும், ஏழை, பணக்காரன் வித்தியாசமின்றி ஒரே இடத்தில் நாங்கள் ஓணம் கொண்டாடுவதாகவும் நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்கள் தெரிவித்தனர்.
மீண்டும் மழை எச்சரிக்கை: கேரளாவில் பல நாட்களாக கொட்டி தீர்த்த மழையின் தீவிரம் கடந்த சில தினங்களாக குறைந்திருந்தது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் வடிந்து விட்டது. மழை குறைந்ததால் மக்கள் நிம்மதியுடன் இருந்து வருகின்றனர். இந்நிலையில் நாளை முதல் 2 நாட்களுக்கு கேரளாவில் மீண்டும் மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது. இது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு விமானப்படையும் உதவி அளித்துள்ளது. கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு விமானப்படை சார்பில் 20 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. தென்பிராந்திய விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் சுரேஷ் ₹20 ேகாடிக்கான காசோலையை பினராய் விஜயனிடம் வழங்கினார்.