News

ஈராக்கில் முன்னாள் எம்.பி. வீட்டில் தற்கொலைப்படை தாக்குதலில் 6 போராளிகள் பலி!

ஈராக்கில் முன்னாள் எம்.பி. வீட்டில் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் சன்னி இனத்தை சேர்ந்த பழங்குடி போராளிகள் 6 பேர் உடல் சிதறி பலியாகினர். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஈராக் நாட்டில் சலாகுதீன் மாகாணத்தின் தலைநகரான திக்ரித்துக்கு வடக்கே சிர்கத் நகரம் உள்ளது. இதையொட்டிய ஆஸ்திரா என்ற கிராமத்தில், அந்த நாட்டின் முன்னாள் எம்.பி. அத்னன் அல் கானத் வீடு உள்ளது. நேற்று அதிகாலை நேரம், இடுப்பில் வெடிகுண்டுகள் பொருத்திய ‘பெல்ட்’ அணிந்து வந்த தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர், அங்கு சென்று குண்டுகளை வெடிக்க வைத்தார். பலத்த சத்தத்துடன் குண்டுகள் வெடித்து சிதறின.

இதில் அங்கு இருந்த சன்னி இனத்தை சேர்ந்த பழங்குடி போராளிகள் 6 பேர் உடல் சிதறி பலியாகினர். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு விரைந்த மீட்பு படையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்சுகளில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த னர். இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இருந்தபோதிலும், சம்பவம் நடந்த பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் இருந்து வருவதால், அவர்களே இந்த தாக்குதலை நடத்தி இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.

சிர்கத் பகுதி 2014-ம் ஆண்டில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினரின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் 2016-ம் ஆண்டு அதை அமெரிக்க படைகளின் ஆதரவுடனும், பழங்குடி போராளிகளின் உதவியுடனும் ஈராக் படையினர் மீட்டு விட்டனர். ஆனாலும் அங்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பதுங்கி இருந்து கொண்டு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top