ஊடகவியலாளர் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் மகிந்த! புலனாய்வு விசாரணையில் அம்பலம்

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டு, கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் மகிந்த ராஜபக்ச இருப்பது தெரியவந்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் இலங்கை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவிடம் கீத் நொயார் வழங்கிய வாக்குமூலத்தில் இது தெரியவந்துள்ளது.
கீத் நொயார், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் வழங்கிய வாக்குமூலம் மிகவும் நீளமானது எனவும் அதில் தாக்குதல் நடத்தப்பட்டமை மற்றும் மேலும் சில சம்பவங்கள் தொடர்பான தகவல்களும் அடங்கியிருப்பதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
கீத் நொயார் வழங்கிய வாக்குமூலத்தில் வெளியான தகவல்களின் அடிப்படையில், வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்ள, குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருமாறு, முன்னாள் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அவர் தமது அறிவிப்பை புறக்கணித்து விட்டதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்களம் கூறியுள்ளது.
இதனால், இறுதியில் மகிந்த ராஜபக்ச வசித்து வரும் வீட்டுக்கு சென்று வாக்குமூலத்தை பதிவு செய்து கொள்வதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவின் கையெழுத்தில் மகிந்த ராஜபக்சவுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தை மகிந்த ராஜபக்சவின் வீட்டில் கையளித்துள்ளதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கு அமைய குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் நாளைய தினம் முற்பகல் 9.30 மணிக்கு மகிந்த ராஜபக்சவின் வீட்டுக்கு சென்று வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ள உள்ளனர். இது குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கும் தெரியப்படுத்தியுள்ளது.
கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் நடந்த கடந்த 2008 ஆம் ஆண்டு ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி, கீத் நொயாருக்கு நெருக்கமான நண்பர்களான ரிவிர பத்திரிகையின் தலைவர் கிறிஷாந்த குரே, லலித் அழகக்கோன் ஆகியோர், சபாநாயகர் கரு ஜயசூரியவை தொடர்பு கொண்டு, கீத் நொயார் கடத்தப்பட்டுள்ளதாகவும் அவரை காப்பாற்றித் தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனையடுத்து கரு ஜயசூரிய, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தொடர்பு கொண்டு, கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் அப்படியான விடயத்தை செய்திருந்தால், வெட்கப்பட வேண்டும் எனவும் இப்படியான அரசாங்கத்தில் அங்கம் வகிப்பது பொருத்தமற்றது என உணர்வதால், அரசாங்கத்தில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.
கரு ஜயசூரிய அண்மையில், குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் வழங்கிய வாக்குமூலத்தில் இதனை கூறியதாக, திணைக்களத்தினர், கல்கிஸ்சை நீதிமன்றத்தில் கூறியிருந்தனர்.
கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் நடந்து 10 வருடங்கள் கடந்துள்ள போதிலும் இந்த சம்பவம் தொடர்பான உரிய விசாரணைகள் நடத்தப்படவில்லை.
இதேவேளை, இதனையடுத்து ஒரு வருடத்திற்கு முன்னர் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள், அவுஸ்திரேலியாவக்கு சென்று, கீத் நொயாரிடம் வாக்குமூலத்தை பெற்று வந்துள்ளனர்.