News

ஐ.நா. அமர்வை எதிர்கொள்ள இலங்கை மும்முர நகர்வுகள்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்படவுள்ள தன்னிச்சையாகத் தடுத்து வைத்தல் தொடர்பான அறிக்கைக்குப் பதிலளிப்பதற்கான நடவடிக்கைகளில் இலங்கை அரசு மும்முரமாக இறங்கியுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 39ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதில் இலங்கை தொடர்பாக தன்னிச்சையாகத் தடுத்து வைத்தல் என்னும் விடயத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த அறிக்கை கடந்த வெள்ளிக்கிழமை தன்னிச்சையாகத் தடுத்து வைத்தல் தொடர்பாக ஆராயும் ஐக்கிய நாடுகள் செயற்குழுவால் மனித உரிமைகள் சபைக்குச் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இலங்கை அரசு தாமதமின்றிப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும், உடனடியாக உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு, இழப்பீட்டு அலுவலகம் என்பவற்றை நிறுவ வேண்டும், 30/1 தீர்மானத்துக்கு அமைய பொறுப்புக்கூறல் பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்பன போன்ற பரிந்துரைகள் அதில் உள்ளன.
இந்தக் குழு கடந்த டிசெம்பர் மாதம் இலங்கைக்கு வந்து நிலைமைகளை ஆராய்ந்த பின்னர் இந்த அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கை மீதான விவாதம் ஜெனிவாவில் எதிர்வரும் 13ஆம் திகதி நடைபெறவுள்ளது.

தற்போது ஒரு அறிக்கை ஐ.நா. மனித உரிமைகள் சபைக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் சில தினங்களில் உண்மை நீதி, இழப்பீடு மற்றும் மீள் நிகழாமை தொடர்பான ஐக்கியநாடுகளின் விசேட நிபுணர் பப்லோ டி கிரீப்பின் இலங்கை தொடர்பான அறிக்கையும் 39/53.1 என்ற தலைப்பில் மனித உரிமை சபைக்குச் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்தநிலையில் இலங்கை அரசு தாம் மேற்கொண்டுள்ள முன்னேற்றகரமான செயற்பாடுகள் தொடர்பாக சர்வதேச சமூகத்துக்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கும் விளங்கமளித்து வருகின்றது.
மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கடந்த 3 ஆண்டுகளாக இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் நல்லிணக்கச் செயற்பாடுகள், அடைந்துள்ள முன்னேற்றங்கள் தொடர்பாகத் தெளிவுபடுத்தும் நடவடிக்கையிலும் இலங்கை அரச பிரதிநிதிகள் ஈடுபட்டுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பணியகம் தற்போது இயங்குகின்றது என்றும், இழப்பீட்டு அலுவலகமும், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவும் விரைவில் அமைக்கப்படும் என்றும் மீள் நிகழாமை என்ற திட்டத்தின் கீழ் அரசமைப்பு உருவாக்கப் பணிகள் நடைபெறுகின்றன என்றும் அரச தரப்பில் விளக்கமளிக்கப்படுகின்றது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த முறை நடக்கவுள்ள கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பான விவாதம் எதுவும் நடைபெறாது. இரு சிறப்பு நிபுணர்கள் இலங்கை தொடர்பான அறிக்கைகளைச் சமர்ப்பிக்கும்போது வெளிநாடுகள் இலங்கை தொடர்பாக எழுப்பும் கேள்விகளுக்கு அட்டவணையில் இல்லாதவகையில் விவாதங்கள் நடைபெறவுள்ளன. எனினும், கூட்டத்தொடரின் முதல்நாள் அமர்வில் உரையாற்றும் ஐ.நா. மனித உரிமைகள் சபை ஆணையாளர் இலங்கை தொடர்பாகக் கருத்துக்களை முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த முறை கூட்டத் தொடர்பில் இலங்கையில் இருந்து அமைச்சர்கள் மட்டத் தூதுக்குழுவினர் கலந்துகொள்வார்களா,அல்லது ஜெனிவா வதிவிடப் பிரதிநிதி தலைமையிலான குழுவினர் கலந்துகொள்வார்களா என்பது பற்றி இலங்கை அரசு அறிவிக்கவில்லை. பெரும்பாலும் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான குழுவினர் இம்முறை ஜெனிவா செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மறுபுறத்தில் பாதிக்கப்பட்ட தரப்பைச் சேர்ந்த பல்வேறு தரப்புக்கள் இந்தக் கூட்டத் தொடரில் கலந்துகொள்ளவுள்ளன. அவர்கள் தமக்கான நீதி தொடர்பில் கூட்டத் தொடரில் பங்கேற்று வலியுறுத்துவர் என்று தெரிவிக்கப்படுகின்றது. தென்னிலங்கையில் இருந்தும் பல தரப்புக்கள் கூட்டத் தொடருக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளன.
2015ஆம் ஆண்டு ஜெனிவாவில் நடைபெற்ற 30 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இலங்கை அரசும் இந்தத் தீர்மானத்துக்கு இணை அணுசரணை வழங்கியிருந்தது. அந்தத் தீர்மானத்தில் உள்ள விடயங்கள் 2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன்னர் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் அந்தத் தீர்மானம் முழுமையாக நிறைவேற்றப்படாததால் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top