கனடாவின் சில விமானச் சேவைகள் ரத்து!

பிரிட்டிஷ் கொலம்பியாவில் கொளுந்துவிட்டு எரிந்துவரும் காட்டுத்தீயினால் ஏற்பட்டுள்ள புகை மூட்டம் காரணமாக கனடாவிலுள்ள பல விமான நிலையங்களின் விமானச் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. பல வாரங்களாக தொடர்ந்து பரவிவரும் காட்டுத்தீயினால் பல்லாயிரம் ஏக்கர் கணக்கான நிலப்பகுதி தீக்கிரையாகியுள்ளன. இந்நிலையில், குறித்த பகுதிகளில் தொடர்ந்தும் புகை மூட்டம் நிலவி வருவதால் கனேடிய விமானச் சேவைகள் நேற்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கெலோவனா சர்வதேச விமான நிலையம், பென்டிக்டன் பிராந்திய விமான நிலையம், கெஸ்ட் லகாரிலுள்ள வெஸ்ட் கூட்டனெய் விமான நிலையம் ஆகியவற்றின் விமானச் சேவைகள் நேற்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளன. காட்டுத் தீயினால் ஏற்பட்டுள்ள புகைமூட்டத்தினால், விமானங்களைச் செலுத்தும் போது விமானிகளுக்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் வான்வழிப் பாதையினை சரியாக அவதானிக்க முடியாமலுள்ளதாகவும் பாதுகாப்பான முறையில் தரையிறக்க தடையாகவுள்ளதாகவும் விமானிகள் குறிப்பிட்டுள்ளனர்.