கனடாவிற்கு தன் நன்றியை காட்டுவதற்காக ஒரு சிரிய அகதி செய்யும் இனிப்பான செயல் .

சிரிய அகதி ஒருவர் தனக்கு வாழ்வளித்த கனடா நாட்டிற்கு தன் நன்றியைக் காட்டும் விதமாக சாக்லேட் பேக்டரி ஒன்றை நிறுவி பலருக்கு வேலை வழங்கி வருகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் சிரியாவிலிருந்து கனடாவிற்கு அகதியாக வந்தவர் Tareq Hadhad. Halifax விமான நிலையத்தில் வந்து இறங்கியபோது, தாங்கள் யாரென்றே தெரியாத நிலையில் Antigonish மக்கள் அகதிகள் முகாமிலிருந்து தங்களை வெளியே கொண்டு வர ஆயிரக்கணக்கான டொலர்கள் வசூலித்து வழங்கியதற்கு, பதில் நன்மை செய்யவேண்டும் என முடிவெடுத்தார் Tareq.
மக்கள், நாங்கள் யார், எந்த மதத்தவர்கள், எங்கள் பின்னணி என்ன, எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற எந்த கேள்வியும் கேட்காமல் எங்களுக்கு ஸ்பான்ஸர் செய்தார்கள் என்கிறார் அவர். தங்களுக்கு உதவிய கனடாவுக்கு பதில் செய்ய விரும்பிய Tareq, Antigonish பகுதியிலுள்ளவர்கள் வேலை தேடி தொலைவான இடங்களுக்கு செல்வதைக் கண்டார். ஆகவே அங்குள்ளவர்களுக்கு வேலை வழங்க திட்டமிட்ட அவர் சிறிய சாக்லேட் பேக்டரி ஒன்றை தொடங்கினார்.
ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு முறை உரையாற்றிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, Tareqஐக் குறித்து தனது உரையில் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது ஸ்பெயின், நைஜீரியா, ஜேர்மனி, நியூசிலாந்து ஆகிய நாடுகளிலிருந்தெல்லாம் தன்னை மக்கள் தொடர்பு கொள்வதாகத் தெரிவிக்கிறார் Tareq.
ஏற்கனவே 25 பேருக்கு வேலை வாய்ப்பளித்துள்ள Tareq, இன்னும் 25 பேருக்கு வேலை வாய்ப்பளிக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்.
புலம்பெயர்ந்தோராக நமது முக்கிய கடமை இந்த நாட்டிலிருந்து பெற்றுக்கொள்வதல்ல, அதற்கு பதிலாக இந்த நாட்டிற்கு நம்மாலானதைக் கொடுப்பதுதான் என்னும் அவர் நாம் இங்கே வந்தது இன்னொருவரின் வேலையை எடுத்துக் கொல்வதற்காக அல்ல பிறருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காகத்தான் என்கிறார்.