சமீபத்தில்தான் கனடா பிரதமர் இன வெறிக்கு தன் நாட்டில் இடமில்லை என எச்சரிக்கை விடுத்திருந்தபோது தற்போது மீண்டும் இனவெறி தொடர்பான சம்பவம் நடந்துள்ளது.
கனடா நாட்டுப் பெண், இந்தியர் ஒருவர் மீது வார்த்தைகளால் இனவெறி தாக்குதல் நிகழ்த்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் குமார் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு வயது மகனுடன் Edmonton பகுதியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், அலுவலகத்துக்கு செல்லும் வழியில் இடைஞ்சலாக தனது காரை நிறுத்தியிருந்த கனடா நாட்டுப் பெண்ணிடம், காரை நகர்த்துமாறு கோரியதற்கு அந்த பெண் எதிர்பாராத நேரத்தில் மோசமான வார்த்தைகளால் தன்னை வசைபாட தொடங்கியதாகவும் கூறினார். மேலும் அந்த பெண் இனவெறியைக் காட்டும் வகையில் தனது தோலின் நிறத்தைக் குறித்தும் கேவலமாக பேசியதாகவும் தெரிவித்துள்ள குமார், அந்த சம்பவத்தை தனது செல் போனில் பதிவு செய்துள்ளார்.
அந்த வீடியோவில் அந்த பெண், குழந்தைகள் அருகில் இருக்கிறார்கள் என்று கூட பார்க்காமல் மோசமான வார்த்தைகளால் குமாரை திட்டுவது பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தன்னை மிகவும் பாதித்துள்ளதாகத் தெரிவிக்கும் குமார், தான் கனடாவில் ஏழு ஆண்டுகளாக வசித்து வருவதாகவும் தான் ஒழுங்காக வரி செலுத்துவதாகவும் கூறுவதோடு இதற்கு மேல் கனடாவின் ஒரு பிரஜையாவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று வருத்தத்துடன் கேட்டுள்ளார். பதிவு செய்துள்ள வீடியோவின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டுள்ள Edmonton பொலிசார் அந்த பெண்ணை தொடர்பு கொள்ள முயன்று வருகின்றனர்.