கனேடிய தூதரை அதிரடியாக வெளியேற்றிய சவுதி அரேபியா !

சவுதி அரேபியாவில் நடந்தேறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக கனடா கேள்வி எழுப்பிய நிலையில் அதிரடியாக கனேடிய தூதரை அந்த நாடு வெளியேற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சவுதி அரேபியாவுக்கான கனேடிய தூதர் நாட்டை விட்டு வெளியேற 24 மணி நேரம் அளித்துள்ளதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.
கனடாவின் வெளிவிவகார அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், சவுதி அரேபிய அரசு காரணமின்றி பொதுமக்களை கைது செய்வதும், பெண்களின் உரிமைக்காக போராடியவர்களை கைது செய்து மிரட்டுவதும் ஏற்றுக் கொள்ள முடியாதது.
குறித்த விவகாரம் தொடர்பில் கனடா அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது எனவும், சவுதி அரேபிய அரசு உடனடியாக அவர்களை விடுவிக்க வேண்டும் எனவும், இதுபோன்ற மனித உரிமைகள் போராளிகளை விடுவிக்க ஆவன செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தது.
ஆனால் அதற்கு பதிலளிக்கும் வகையில் கனடாவுடனான அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் முடக்க இருப்பதாகவும், புதிதாக இனி எந்த வர்த்தக உறவும் கனடாவுடன் இல்லை எனவும் சவுதி அரேபியா அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.
மட்டுமின்றி சவுதி அரேபியாவின் உள்விவகாரங்களில் கனடா தலையிடுவதாகவும் குற்றஞ்சாட்டி, சவுதி அரேபியாவுக்கான கனேடிய தூதரை 24 மணி நேரத்தில் நாட்டைவிட்டே வெளியேறவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் கனடாவில் உள்ள சவுதி தூதரையும் திரும்ப அழைத்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.