கருணாநிதிக்கு பிறகு திமுக தலைவராக போட்டியின்றி தேர்வாகிறார் மு.க.ஸ்டாலின்?

கருணாநிதிக்கு பிறகு திமுகவின் தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வாகவுள்ளார். அறிஞர் அண்ணாவால் திராவிட முன்னேற்ற கழகம் என்னும் கட்சி கடந்த 1949-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. அன்று முதல் பெரியார் ஒருவரையே கட்சியின் தலைவராக கொண்டு திமுக செயல்பட்டு வந்தது.
அதன்பின்னர் கருணாநிதியின் செயல்பாடுகளை பார்த்த பெரியார், அவரை கட்சியின் தலைவராக நியமிக்கும்படி அண்ணாவிடம் வேண்டுகோள் விடுத்தார் அதனடிப்படையில் அண்ணாவின் மறைவிற்கு பிறகு கடந்த 1969-ம் ஆண்டு முதன்முறையாக திமுக கட்சியின் தலைவராக கலைஞர் கருணாநிதி நியமிக்கப்பட்டார்.
கடந்த 50 ஆண்டுகளாக திமுக-வின் தலைவராக பதவி வகித்து வந்த கருணாநிதி கடந்த 7-ம் தேதியன்று மரணமடைந்தார். இந்த நிலையில் திமுகவின் அடுத்த தலைவர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்கான வேட்பு மனுதாக்கல் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அதில் தலைவர் பதவிக்கு ஸ்டாலினை தவிர வேறு யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. அதேபோல முதன்மை செயலாளராக பதவி வகித்து வந்த துரைமுருகனை தவிர வேறு யாரும் பொருளாளர் பதவிக்கு மனுதாக்கல் செய்யவில்லை.
இதனால் 65 திமுக மாவட்ட செயலாளர்கள் முன்மொழிதலுடன் திமுகவின் தலைவராக ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வருகின்ற 28-ம் தேதி நடைபெற உள்ள திமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் ஸ்டாலின் தலைவராக அதிகாரபூர்வமாக பதவியேற்க உள்ளார்.