கருணாநிதியின் இறப்பு செய்தி கேட்டு அதிர்ச்சியில் உயிரிழந்த 34 பேர் !

திமுக தலைவர் கருணாநிதியின் இறப்பு செய்தி கேட்டு அதிர்ச்சியில் 34 பேர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருணாநிதியின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த திமுக தொண்டர்கள் மதுரை அவனியாபுரம் இந்திரா, இளைஞர் அணி நிர்வாகி அழகு ராஜா , கருப்பாயூரணி நாகராஜன் ஆகியோர் மாரடைப்பால் மரணம் அடைந்தனர்.
சேலம் மாவட்டம் எலவம்பாளையம் கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவர், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கச்சுப்பள்ளி கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவரும் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே உள்ள புறா கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் உலகநாதன் (47), மயிலாடுதுறை அருகே உள்ள பண்டாரவடை நெய்குப்பை கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (70), மயிலாடுதுறையை அடுத்த பெரம்பூர் கீழத்தெருவை சேர்ந்த நாதஸ்வர வித்வானான ராஜேந்திரன் (50), மயிலாடுதுறை மேலபெரம்பூர் கிராமத்தை சேர்ந்த கலியமூர்த்தி (56), மணல்மேடு அருகே உள்ள கொற்கை கிராமத்தை சேர்ந்த நாகராஜ் (70) ஆகிய தி.மு.க. தொண்டர்கள் கருணாநிதி இறந்த செய்தி கேட்டு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்தனர்.
கருணாநிதி இறந்ததை அறிந்த ராஜா துக்கம் தாங்காமல் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுவரை மொத்தம் 34 பேர் உயிரிழந்துள்ளனர்.