கலைஞருக்கு புகழ் வணக்கம்: முன்னாள் பிரதமர் தேவகவுடா, நிதின் கட்கரி உள்ளிட்ட பல தலைவர்கள் புகழ் அஞ்சலி

சென்னை: 50 ஆண்டுக்கும் மேலாக திராவிட இயக்கத்தை வழிநடத்திச் சென்றவர் கலைஞர் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறியுள்ளார். மண்டல கமிஷன் அறிக்கையை அமல்படுத்த பாடுபட்டவர் கலைஞர் என்று அவர் தெரிவித்துள்ளார். சுயமரியாதையையும், சமூக நீதியையும் பாதுகாக்க உழைத்தவர் கலைஞர் என்று தேவகவுடா புகழாரம் சூட்டியுள்ளார். பிரதமர் பதவியை ஏற்குமாறு தம்மை வற்புறுத்தியவர் கலைஞர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களுக்கு பிரச்சனை வரும்போது ஓங்கிக் குரல் கொடுத்தவர் கலைஞர் நாராயணசாமி புகழ் அஞ்சலி செலுத்தினார். பிறபடுத்தப்பட்டோருக்கு இடை ஒதுக்கீடு பெற்றத் தலைவர் கலைஞர் என்று அவர் கூறியுள்ளார். நேருவின் மகளே வருக, நல்லாட்சி தருக என்று இந்திரா காந்தியை வரவேற்றவர் கலைஞர் என்று நாராயணசாமி கூறினார்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், இரங்கல் தெரிவிக்கப்பட்ட வரலாறு கருணாநிதிக்கு உள்ளது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசினார். எமர்ஜென்சி காலத்தில் திமுகவின் பங்கு அளப்பரியது என்று நிதின் கட்கரி கூறியுள்ளார். தேசிய நலனுக்காக தனி திராவிட நாடு கொள்கையை தளர்த்தி கொண்டவர் கருணாநிதி என்று நிதின் கட்கரி கூறியுள்ளார். நெருக்கடி நிலையை எதிர்த்ததால் கலைஞரும், திமுகவினரும் கொடுமைப்படுத்தப்பட்டனர் என்றும் கலைஞர் தேசத்தின் தலைவர் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலைஞருக்கு புகழ் அஞ்சலி செலுத்தினார்.
பன்முக திறமை கொண்டவர் கருணாநிதி என்று தெலுங்குதேசம் எம்.பி. ஒய்.எஸ்.சவுத்ரி தெரிவித்துள்ளார். கருணாநிதியின் இடத்தை யாரும் பூர்த்தி செய்ய முடியாது என்று ஒய்.எஸ்.சவுத்ரி கூறியுள்ளார்.
இந்திய அரசியல் அரங்கில் ஏற்பட்ட பல மாற்றங்களுக்கு மூல காரணமாக இருந்தவர் கருணாநிதி என்று திமுக பொருளாளர் துரைமுருகன் பேசினார். கருணாநிதியை தவிர்த்துவிட்டு, திராவிட வரலாற்றை யாரும் எழுத முடியாது என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் மொழி திணிப்பை எதிர்த்து போராட்டம் நடத்தியவர் கலைஞர் என்று டெரிக் ஓ பிரியன் கூறியுள்ளார். கூட்டாட்சி தத்துவத்துக்கு முன்னுரிமை அளித்தவர் கலைஞர் என்றும் அவர் கூறியுள்ளார்.
கூட்டத்தில் முன்னாள் பிரதமர் தேவ கவுடா, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, குலாம் நபி ஆசாத், சீதாராம் யெச்சூரி, பிரஃபுல் பட்டேல், ஃபரூக் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் கருணாநிதி புகழஞ்சலி கூட்டம் தொடங்கியது. மேலும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கி.வீரமணி, வைகோ, பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.