காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்துள்ளது என்பதை கண்டறிவோம்! -சாலிய பீரிஸ்.

இலங்கையில் கடந்த காலங்களில் 21 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காணாமலாக்கப்பட்டிருக்கலாம் என்றும், எனினும் இந்த எண்ணிக்கை இறுதியானது என்ற முடிவுக்கு வரமுடியாது எனவும், காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
“ காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்ட ஏனைய ஆணைக்குழுக்களை போல் அல்லாது, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்துள்ளது என்பதை கண்டறியும் செயற்பாடுகளில் காணாமல் போனோருக்கான அலுவலகம், ஈடுபடும். சர்வதேச செஞ்சிலுவை சங்கம் 2016 ஆம் ஆண்டு வெளியிட்ட தரவுகளின்படி, 16 ஆயிரம் பேரும், காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் ஆராயும், பரணகம ஆணைக்குழுவின் தரவுகளின்படி, 21 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும், கிராம சேவகர்களூடாக, தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சு பெற்றுக்கொண்டுள்ள தரவுகளின்படி, 13 ஆயிரம் பேரும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். மேற்குறித்த தரவுகளின் அடிப்படையில், உறுதியாக கூறமுடியாவிட்டாலும், 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.