காஷ்மீரில் நிலச்சரிவு: சிறுமி உள்பட 6 பேர் பலி!

காஷ்மீரில் நிலச்சரிவில் வாகனம் சிக்கிய விபத்தில், சிறுமி உள்பட 6 பேர் பலியாயினர்.
காஷ்மீர் மாநிலம் கிஸ்த்வார் மாவட்டத்தில் குலாப்கார்க் என்ற இடத்தில் மச்சாயில் மாதா கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு உதம்பூர் மாவட்டத்தில் இருந்து சிலர் ஒரு வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
டிராப்சல்லா என்ற இடத்தில் அவர்களின் வாகனம் சென்று கொண்டிருந்த போது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது பெரிய கற்கள் மற்றும் மண் சரிந்து அந்த வாகனத்தின் மீது விழுந்தது.
இதில் வேன் நசுங்கி 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். படுகாயம் அடைந்த 9 பேர் கிஸ்த்வாரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் சிறுமி உள்பட 2 பேர் இறந்தனர். இதையடுத்து இந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.
பின்னர் படுகாயத்துடன் இருந்த மற்ற 7 பேரும் மேல் சிகிச்சைக்காக ஜம்முவில் இருக்கும் ஆஸ்பத்திரிக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.