News

கிளிநொச்சியில் இளம்பெண்ணின் சடலம் – தடயப்பொருட்களால் பரபரப்பு!

கிளிநொச்சி – கரைச்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட பிரவுன் ரோட் பகுதியில் உள்ள வயல் கால்வாயில் இளம் பெண் ஒருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று காலை அப்பகுதிக்கு பின்புறமாக உள்ள குளத்திற்கு மீன்பிடிக்க சென்ற இருவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதனை அடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட யுவதி முல்லைத்தீவு முறுகண்டி சேர்ந்த 32 வயதான கறுப்பையா நித்தியகலா என்பவரே என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர், அறிவியல் நகரில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் வேலை பார்ப்பவர் என்றும் கூறப்படுகிறது.

சடலத்தின் முகத்தில் பாரிய காயம் இருப்பதுடன் உள்ளாடைகளுடன் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமையால் இது கொலையாக இருக்கலாம் எனவும் , வன்புணர்வின் பின் நடந்த கொலையாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

இதுவரை குறித்த சடலம் யாருடையது என அடையாளம் காணப்படவில்லை.சம்பவ இடத்திற்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் நீதிபதியையும் குற்றத் தடவியல் பொலிஸாரையும் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேவேளை சம்பவ இடத்தில் சிவில் பாதுகாப்பு படை அதிகாரியின் பெல்ட், இரண்டு பேனாக்கள்,செருப்பு, கொலுசு, ஒரு கோர்வையில் நான்கு திறப்புக்கள், பியர் ரின், நீலம் மற்று மஞ்சள் நிறங்களில் செருப்புக்கள் இரண்டு சோடி, போன்ற தடயப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கொலை செய்யப்பட்ட பின்னர் சடலம் அவ்விடத்துக்குக் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. கழுத்து இறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் வகையில் கழுத்தில் கறுப்பு அடையாளம் காணப்படுவதுடன், முகம் சேதப்படுத்தப்பட்ட நிலையிலும் காணப்பட்டுள்ளது. அறுவடை செய்யப்பட்ட வயல் நிலங்களில் எரிக்கப்பட்ட வைக்கோல்கள் மத்தியில் சடலம் இழுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. சடலத்தின் கால்களில் கரி படிந்திருக்கிறது.

சம்பவ இடத்திற்கு இன்று பிற்பகல் 2.45 மணிக்கு சென்று கிளிநொச்சி நீதிவான் சடலத்தை பார்வையிட்டுள்ளார். அத்தோடு மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், சடலம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top