சீனாவில் பிரபல ஓட்டலில் திடீர் தீ விபத்து- 18 பேர் உயிரிழப்பு , 19 பேர் காயம்!

சீனாவின் ஹார்பின் நகரில் உள்ள பிரபல ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர்.
சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள ஹார்பின் நகரில் ஹாட் ஸ்பிரிங்ஸ் ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலின் ஒரு தளத்தில் இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்தது. பின்னர் மற்ற தளங்களுக்கும் பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.
இதுபற்றி தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் மீட்பு பணி நடைபெற்றது.
இந்த தீ விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். 19 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 4 தளங்கள் கொண்ட ஓட்டலில் சுமார் 400 சதுர மீட்டர் பரப்பளவுக்கு தீயில் கருகியிருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பீஜிங்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் உயிரிழந்ததையடுத்து, கட்டிடங்களில் பாதுகாப்பு விதிமீறல்களை கண்டுபிடிக்க 40 நாட்கள் தீவிர சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.