News

செஞ்சோலைப் படுகொலையின் 12ம் ஆண்டு நினைவேந்தல் இன்று !

முல்லைத்தீவில் ஓகஸ்ட் 14, 2006 இலங்கை விமானப்படையின் விமானங்கள் சிறுமிகள் பராமரிப்பு நிலையத்தின் மீது நடத்திய ஷெல் வீச்சுத் தாக்குதலில் 61 சிறுமிகள் கொல்லப்பட்டும், 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்தத் தாக்குதலின் 12ம் ஆண்டு நினைவேந்தல் தினம் இன்று காலை நினைவுகூரப்பட்டது. முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு உட்பட பல பிரதேசங்களிலும் நினைவு மண்டபங்கள் அமைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவிகளின் திருவுருவப்படமும் வைத்து நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

கடந்த 2006ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா வான்படையால் குண்டு வீசித் தாக்கப்பட்ட அப்பாவி மாணவிகளில்,

பெரும்பாலனவர்கள் 15-18 வயதுக்குட்பட்ட மாணவிகளேயாவர். அவ்வாறு கொல்லப்பட்ட மாணவிகளில் பெரும்பாலனவர்கள் க.பொ.த (உ/த) கற்கும் மாணவிகள். இவர்கள் உயர்தர மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நெறிக்காக கிளிநொச்சி, முல்லைத்தீவு, துணுக்காய் கல்விவலய பாடசாலைகளில் இருந்து தலைமைத்துவ தகமைக்கு தெரிவுசெய்யப்பட்டு செஞ்சோலையில் கூடியிருந்தனர்.

அவ்வாறு கூடியிருந்த 400 மாணவிகளில் ஒரு பகுதியினரே விமானத்தாக்குதலில் கொல்லப்பட்டனர். இப்பயிற்சி நெறி ஆகஸ்ட் 11, 2006 இருந்து 20 ஆகஸ்ட், 2006 வரை நடைபெறுவதாக இருந்தது.

இப்பயிற்சி நெறி “கிளிநொச்சி கல்விவலயத்தால்” ஒழுங்கமைக்கப்பட்டு,பெண்கள் புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி அமைப்பின் (CWRD)” நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டது.

முல்லைத்தீவு படுகொலைக்கு பல சர்வதேச அமைப்புக்களும் கண்டனம் வெளியிட்டிருந்த வேளை,

இலங்கை அரச பேச்சாளராக இருந்த ஹெகலிய ரம்புக்வெல தாக்கப்பட்ட இடம் புலிகளின் தளம் என்றும், அதில் சிறுவர்கள் கொல்லப்பட்டிருந்தால் அவர்கள் புலிகளால் பலவந்தமாக சேர்க்கப்பட்ட குழந்தைப் போராளிகள் என்றும் கூறியிருந்தார்.

எனினும் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட நடுநிலை அமைப்புக்களான ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமும் இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் கொல்லப்பட்ட அனைவரும் அப்பாவி மாணவர்களே என்பதை உறுதிசெய்தன. ஆனாலும் அங்கு சென்று பார்வையிட்ட நடுநிலை அமைப்புகள் போர் அனுபவம் அற்றவர்கள் என்றும் அவர் குற்றம் சாட்டியிருந்தார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top