News

துருக்கியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் துப்பாக்கிச்சூடு!

அமெரிக்காவுக்கும் துருக்கிக்கும் இடையே தற்போது பொருளாதார மோதல் நடந்து வரும் நிலையில், அங்காராவில் உள்ள அமெரிக்க தூதரத்தில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவை சேர்ந்தவர் பாதிரியார், ஆண்ட்ரூ பரன்சன். இவர் துருக்கியில் வசித்துக்கொண்டு அங்கு ஒரு ஆலயத்தை நடத்தி வந்தார். இந்த நிலையில், அவர் அங்கு உள்ள குர்து இன போராளிகள் குழுவுடன் தொடர்புகள் வைத்து இருக்கிறார், உளவு வேலைகளில் ஈடுபடுகிறார் என்று கூறி, துருக்கி அரசு கைது செய்து 2 ஆண்டுகளாக சிறைக்காவலில் வைத்து உள்ளது.

ஆனால் அவரை விடுதலை செய்து, அமெரிக்காவுக்கு நாடு கடத்த வேண்டும் என்ற டிரம்ப் நிர்வாகத்தின் வேண்டுகோளை துருக்கி ஏற்க மறுத்து விட்டது. இதன் காரணமாக துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற உருக்கு, அலுமினியம் ஆகியவற்றின்மீது 2 மடங்கு வரி விதித்து டிரம்ப் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்தது.

இதன் காரணமாக துருக்கியின் நாணய மதிப்பு வெகுவாக சரிந்து உள்ளது. ஆனாலும் துருக்கி தளர்ந்துபோகாமல் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்கிற பொருட்கள் மீது கூடுதல் வரி விதிப்பை அறிவித்து உள்ளது. இதனால் துருக்கியின் நாணய மதிப்பு ஆட்டம் கண்டுள்ளது.

இந்நிலையில், அங்காராவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. காரில் இருந்து ஒரு கும்பல் தூதரகத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளதாகவும், ஜன்னல்கள் சேதமடைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

எனினும், இந்த தாக்குதலில் உயிர் சேதம் இல்லை. பக்ரீத் பண்டிகைக்காக தூதரகத்திற்கு ஒருவாரம் விடுமுறை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top