India

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி கிடையாது – தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி கிடையாது என்றும், நிர்வாக பணிகளை மட்டும் மேற்கொள்ளலாம் என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மே மாதம் நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டு அப்போது நடந்த தடியடி, துப்பாக்கி சூட்டில் 13 பேர் இறந்தனர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு மே 28-ந்தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த மனு தேசிய பசுமை தீர்ப்பாய உறுப்பினர்களான நீதிபதிகள் ஆதர்ஷ்குமார் கோயல், டாக்டர் ஜவாத் ரகீம், எஸ்.பி.வங்டி, டாக்டர் நகின்நந்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் சார்பில் மூத்த வக்கீல்கள் சி.எஸ்.வைத்தியநாதன், ராகேஷ் திவிவேதி உள்ளிட்டோரும், ஸ்டெர்லைட் தரப்பில் மூத்த வக்கீல் அரிமா சுந்தரம், பினாகி மிஸ்ரா ஆகியோரும் ஆஜரானார்கள். இந்த வழக்கில் தன்னையும் ஒரு தரப்பாக சேர்க்க மனுதாக்கல் செய்துள்ள ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் ஆஜரானார்.

அரிமா சுந்தரம் தன்னுடைய வாதத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழக அரசு பிறப்பித்துள்ள 5 உத்தரவுகளையும் ரத்துசெய்ய வேண்டும் என்று கூறி, ஆலைக்கு எதிரான போராட்டம் குறித்து விவரிக்க தொடங்கினார்.

சி.எஸ்.வைத்தியநாதன் குறுக்கிட்டு, அரசு பிறப்பித்துள்ள உத்தரவுகளில் கோர்ட்டுகளோ, தீர்ப்பாயங்களோ தலையிட முடியாது. இதே போன்ற மனுவை வேதாந்தா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டிலும் தாக்கல் செய்துள்ளது என்றார்.

அரிமா சுந்தரம் வாதிடுகையில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்பும் நாங்கள் முறையிட்டோம். தமிழக அரசு பிறப்பித்துள்ள அனைத்து ஆணைகள் மீதும் மேல்முறையீடு செய்வதற்கு முகாந்திரம் உண்டு என்று கூறினார்.

உடனே தமிழக அரசு தரப்பில் வாதிடும்போது, ஆலையை மூடுவதற்கு பிறப்பித்த ஆணை மாநில அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி வெளியிட்டதாகும். இதன் மீது இவர்கள் மேல்முறையீடு செய்ய முடியாது. இந்த மனுவின் ஏற்புத்தன்மை கேள்விக்குரியது என்றனர்.

இதற்கு நீதிபதிகள் உங்கள் வாதத்தை ஏற்க முடியாது. மனுதாரர்கள் தங்கள் வாதத்தை தொடரலாம் என்றனர்.

பின்னர் ஸ்டெர்லைட் தரப்பில் வாதிடுகையில், இந்த பிரச்சினை 1996-ம் ஆண்டில் இருந்து அரசியல்வாதிகளால் உள்நோக்கத்துடன் கிளறப்பட்டு வருகிறது. இவர்கள் கூறும் வகையில் சுற்றுச்சூழலுக்கு மாசு எதுவும் ஏற்படவில்லை. பொதுமக்களிடம் இருந்து எந்த புகாரும் வரவில்லை. எனவே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது என்றனர்.

வக்கீல் ராகேஷ் திவிவேதி தன்னுடைய வாதத்தில், ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி அருகில் உள்ள நதிகளும் மாசுபடுகின்றன. இந்த ஆலை வெளியேற்றும் கழிவுகள் மிகவும் ஆபத்தானவை. இந்த ஆலைக்கு சுப்ரீம் கோர்ட்டு 2013-ம் ஆண்டு ரூ.100 கோடி அபராதம் விதித்தது. உடனடியாக ஒரு குழு அமைத்து ஆய்வை மேற்கொண்டால் அங்குள்ள மாசுக்கேட்டை நிரூபிக்க முடியும் என்றார்.

இதற்கு ஸ்டெர்லைட் சார்பில், நாங்களும் ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்றுதான் கூறுகிறோம். தற்போது ஆலையை பராமரிக்க எங்களுக்கு இடைக்கால அனுமதி வேண்டும் என்றனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட தீர்ப்பாயம், ஆலையில் நிர்வாக பணிகளை மட்டும் மேற்கொள்ள அனுமதி அளித்தது. மேலும் நிர்வாக ரீதியிலான பணிகளுக்காக ஆலைக்குள் ஊழியர்களை அனுமதிக்க வேண்டும், ஆலை இயங்காமல் இருப்பதை தூத்துக்குடி கலெக்டர் கண்காணிக்க வேண்டும். ஆலையில் அமில கசிவை கண்காணிக்க தனி அதிகாரியை மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரைக்க வேண்டும். ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள குழுவுடன் இந்த அதிகாரியும் இணைந்து ஆலையால் ஏற்பட்ட மாசு தொடர்பான அறிவியல்பூர்வ ஆதாரங்களை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

இதற்கு தமிழக அரசு தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொள்ளாத நீதிபதிகள், ஆலை எக்காரணம் கொண்டும் இயங்க அனுமதி கிடையாது. நிர்வாக பணிகள் மட்டும் மேற்கொள்ளலாம் என்று உத்தரவிட்டனர்.

மாசு தொடர்பான ஆதாரங்களை தாக்கல் செய்ய 10 நாள் அவகாசம் அளிக்கும்படி தமிழக அரசு சார்பில் கேட்கப்பட்டது. அந்த ஆதாரங்களை 20-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்ட தீர்ப்பாயம், வழக்கு விசாரணையை 20-ந்தேதிக்கு ஒத்திவைத்தது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top