நாடு பிரியாமல் இருப்பதற்கு இதுதான் இறுதிச் சந்தர்ப்பம்! – சிங்கள மக்கள் மத்தியில் சுமந்திரன் எடுத்துரைப்பு.

“ஒரு நாடாக வாழ்வதற்கான இணக்கம் இன்னமும் ஏற்படுத்தப்படவில்லை. தற்போது முதன்முறையாக சமூக ஒப்பந்தம் முன்மொழியப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்ட சமூக ஒப்பந்தத்தின் பிரதான நோக்கம் பிரிக்கப்படாத, பிரிக்க முடியாத ஒரே நாட்டினுள் இலங்கையில் வசிக்கும் வெவ்வேறு மக்களுக்கும் அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது. ஒரு நாடாக இருக்க விரும்பினால் இதுதான் சந்தர்ப்பம்.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான வழிநடத்தல் குழுவின் உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
புதிய அரசமைப்புத் தொடர்பில் மக்களுக்கு அறிவூட்டும் கூட்டம் இரத்தினபுரியில் நேற்று இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அரசமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தம். இதுவரை நாம் 3 அரசமைப்பைக் கொண்டிருந்த போதிலும் நாம் ஒரு சமூக ஒப்பந்தத்தைக் கொண்டிருக்கவில்லை. அதாவது ஒரு நாடாக வாழ்வதற்கான இணக்கத்தைக் கொண்டிருக்கவில்லை.
முதல் தடவையாக தமிழ் தரப்பு உள்ளிட்ட சகலரின் பங்களிப்புடனும் புதிய அரசமைப்பு உருவாக்கப்படுகின்றது. ஒரு நாடாக இருக்க விரும்பினால் இதுதான் சந்தர்ப்பம்.
பிரதான இரண்டு கட்சிகளும் அரசில் இருப்பது இதுவே முதல் முறை. அத்துடன் சகல அரசியல் கட்சிகளும் இதில் பங்கேற்றுள்ளன. எனவே, இந்தச் சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது.
அதிகாரப் பகிர்வு முன்மொழிவு வடக்கு – கிழக்கிலிருந்து முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், நாடு பிரிபடுவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தவறான பரப்புரை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
முன்மொழியப்பட்டுள்ள அதிகாரப் பகிர்வுத் திட்டங்கள் தெற்கைச் சேர்ந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 6 முதலமைச்சர்களால் முன்மொழியப்பட்டதே. 7ஆவது முதலமைச்சர் ஆளுநர் பதவியை இல்லாதொழிப்பது தொடர்பில் கூறியிருந்தார். அதனை நாங்கள் புதிய அரசமைப்பில் உள்ளடக்கவில்லை. இதுதான் உண்மை.
நாடு ஒன்றாக இருக்கவேண்டும். அதிகாரங்கள் பகிரப்படவேண்டும். இதுதான் எமது நிலைப்பாடு” – என்றார்.