நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையினை ஒழிப்பதற்கு மஹிந்த அணி எதிர்ப்பு..

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை ஒழிப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அந்த கட்சியின் தலைவர் ஜீ.எல்.பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘நாடு இப்போது இருக்கும் நிலையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினை ஒழிப்பதற்கு நாம் முற்றாக எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இந்த காலத்திற்கு அவசியமான ஒரு நடவடிக்கையாக நாம் இதனைப் பார்க்கவில்லை.
நிறைவேற்ற அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினை ஒழிப்பதனால், நாட்டின் பாதுகாப்பிற்பு பாரிய அச்சுறுத்தல் ஏற்படும். புதிய யோசனையாக முன்வைக்கப்பட்டுள்ள அரசியல்யாப்பு சீர் சிருத்தத்தில், ஆளுநர்கள் அந்தந்த மாகாண முதலமைச்சர்களின் உத்திரவிற்கு அமையவே பணியாற்றுவதாக இருக்கிறது. இதனால் ஜனாதிபதிக்கான பெருமளவிலான அதிகாரங்கள் குறைகின்றன.
அதில் ஒரு மாகாணத்தின் நிறைவேற்று அதிகாரம் அந்த மாகாண அமைச்சரவைக்கே இருப்பதாக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரையில் நிறைவேற்று அதிகாரத்தை இந்த நாட்டின் தலைவரான ஜனாதிபதியே பயன்படுத்தி வந்தார். இந்த புதிய அரசியலமைப்பு யோசனைக்கு அமைய அது முற்றாக மாற்றமடைகிறது. இதனால் என்ன நடக்கப்போகிறது.
நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க அளுநருக்கு அதிகாரம் இருக்கிறது. இந்த புதிய அரசியலமைப்பிற்கு அமைய, ஆளுநர் அந்தந்த மாகாண முதல்வரின் பரிந்துரைக்கு அமையவே நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்கலாம். நாடாளுமன்ற உறுப்பினர், விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக எடுக்கப்படகூடிய சட்டநடவடிக்கைகள் குறித்து, சட்டமா அதிபர், கரு சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு அறிவித்துள்ளார்.
விஜயகலாவிற்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்களா? இல்லை. 6 ஆம் திருத்தச்சட்டத்தில், இது குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. வேறு இராச்சியம், ஒற்றையாட்சியை சிதைப்பது போன்றவற்றிற்கு துணைப்போனால் அது பாரிய குற்றமாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அவர்கள் நாடாளுமன்ற உறுப்புரிமையும் இழக்க நேரிடும் என கூறப்பட்டுள்ளது.
ஆனால் இதுவும் புதிய அரசியலமைப்பு யோசனையினால் தடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் மீது வழக்கு தொடர்ந்து அவர்கள் குற்றவாளிளாக தீர்ப்பு வந்தாலும், அதனை அந்த மாகாண முதலமைச்சர் ஆளுநரின் ஊடாக மாற்றியமைத்து அவர்களுக்கு மன்னிப்பினை வழங்கலாம்“ என தெரிவித்துள்ளார்