India

நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் விறுவிறுப்பாக நடக்கும் வழக்கு ஜெயலலிதாவுக்கு வைக்கப்பட்டிருந்த எக்மோ கருவியை அகற்ற சொன்னது எய்ம்ஸ் டாக்டர்களா?

சென்னை: நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் எய்ம்ஸ் டாக்டர்கள் கில்னானி உட்பட 3 பேர் இன்று ஆஜராகின்றனர். இந்த விசாரணையில் ஜெயலலிதா மரணம் தொடர்பான பல அதிர்ச்சி தரும் உண்மைகள் வௌிச்சத்துக்கு வரும் என்று அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் சார்பில் ஜெயலலிதா, சசிகலா உறவினர்கள், அரசு டாக்டர்கள், அப்போலோ டாக்டர்கள், செவிலியர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் என இதுவரை 85 பேரிடம் நீதிபதி விசாரணை நடத்தியுள்ளார். முழு உண்மையை வெளியே கொண்டு வரும் வகையில் முக்கிய நபர்களிடமும் ஆணையம் விசாரிக்க திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே, ஜெயலலிதா தோழி சசிகலா உட்பட 20க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்படவிருக்கிறது. விரைவில் அவர்களுக்கு ஆணையம் சார்பில் சம்மன் அனுப்பவும் நீதிபதி முடிவு செய்துள்ளார். இதற்கிடையே எய்ம்ஸ் டாக்டர்கள் ஜி.சி. கில்னானி, அஞ்சன்டிரிகா, நிதிஷ் நாயக் ஆகிய மூன்று பேரும் ஆஜராக ஆணையம் சார்பில் கடந்த வாரம் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த போது, எய்ம்ஸ் டாக்டர்கள் வர வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை சார்பில் மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அறிந்து கொள்ள எய்ம்ஸ் டாக்டர்கள் வருகை தந்தனர். அவர்கள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சைகள் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும்,தினமும், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் மருத்துவ அறிக்கை குறித்து ஆய்வு செய்து வந்தனர். அப்போலோ டாக்டர்கள் உடன் எய்ம்ஸ் டாக்டர்கள் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து பல கட்டமாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.எய்ம்ஸ் டாக்டர்கள் கடந்த 2016 டிசம்பர் 3ம் தேதி டில்லி புறப்பட்டு சென்றனர். அன்றைய தினத்தில் ஜெயலலிதாவுக்கு நல்ல சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல் நிலை தேறி வருவதாகவும் எய்ம்ஸ் டாக்டர்கள் அறிக்கை அளித்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், மறுநாள் அதாவது டிசம்பர் 4ம் தேதி ஜெயலலிதாவுக்கு திடீரென கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து மீண்டும் எய்ம்ஸ் டாக்டர்கள் அப்போலோ மருத்துவமனைக்கு வந்தனர்.

அவர்கள் தான் ஜெயலலிதாவுக்கு பல கட்ட சிகிச்சை அளித்த பிறகும், உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை எனக்கூறி எக்மோ கருவி அகற்றுமாறு அப்போலோ டாக்டர்களுக்கு அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது. அதன்பிறகே ஜெயலலிதாவுக்கு எக்மோ கருவி அகற்றப்பட்டதாக அப்போலோ டாக்டர்கள் சாட்சியம் அளித்தனர். எனவே, இது தொடர்பாக எய்ம்ஸ் டாக்டர்களிடம் விசாரணை நடத்தினால் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரலாம் என்ற அடிப்படையிலேயே அவர்களுக்கு சம்மன் அனுப்பியிருப்பதாக விசாரணை ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிலையில், எய்ம்ஸ் டாக்டர்கள் 3 பேரும் இன்று காலை 10 மணியளவில் நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில் விசாரணை ஆணையத்தில் ஆஜராகின்றனர். அவர்களிடம் பல்வேறு கேள்விகளை கேட்க ஆணையம் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இந்த விசாரணைக்கு பிறகு நாளை காலை 9 மணியளவில் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் எய்ம்ஸ் டாக்டர்களிடம் குறுக்கு விசாரணை செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top