பாகிஸ்தானில் பெண்கள் பள்ளிகளை எரித்த முக்கிய குற்றவாளி சுட்டுக் கொல்லப்பட்டான்.

பாகிஸ்தானின் கில்கிட்-பல்ட்டிஸ்தானில் பகுதியில் பெண்கள் பள்ளிகளை எரித்த முக்கிய குற்றவாளியை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
பாகிஸ்தானில் பெண்களுக்கு கல்வியறிவு கூடாது என்று வாதிடும் பழமைவாதிகள் அதிகம் உள்ளனர். இவர்களில் பலர் பயங்கரவாதிகளாகவும் மாறி மாணவிகள் மீதும் பெண்கள் பயிலும் பள்ளிக்கூடங்களின் மீதும் தாக்குதலில் நடத்தி வருகின்றனர்.
இந்த பயங்கரவாதிகளின் கொலைவெறி தாக்குதலில் இருந்து தப்பி உயிர் பிழைத்த மலாலா யூசுப் சாய், பாகிஸ்தான் நாட்டில் பெண் கல்விக்கு எதிராக நடைபெற்றுவரும் சமூக அநீதியை உலகத்துக்கு தோலுரித்து காட்டினார்.
இந்நிலையில், கில்கிட்-பல்டிஸ்தான் பகுதிக்குட்பட்ட டயாமர் மாவட்டம், சிலாஸ் நகரில் உள்ள 12 பள்ளிகளுக்கு நேற்று முன்தினம் இரவு பயங்கரவாதிகள் தீ வைத்தனர். இதில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீக்கிரையாகின. தீ வைக்கப்பட்ட பள்ளிகளில் பாதி பள்ளிகள் பெண்கள் மட்டுமே படிக்கும் பள்ளிகள் ஆகும்.
தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தியும், பள்ளிகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்கக்கோரியும் பொதுமக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளிகளுக்கு தீ வைத்த பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினரும் போலீசாரும் தீவிரமாகத் தேடி வந்தனர். நேற்றிரவு டயாமர் மாவட்டத்தின் பல பகுதிகளில் 12 தனிப்படை போலீசார் இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். டாங்கர் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய எதிர்தாக்குதலில் ஒரு போலீஸ்காரர் உயிரிழந்தார்.
விடியவிடிய இருதரப்பினருக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பள்ளி தீவைப்பு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ஷபீக் என்பவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.