பாகிஸ்தானில் 12 பள்ளிக்கூடங்கள் தீ வைத்து எரிப்பு!

பாகிஸ்தானில் 12 பள்ளிக்கூடங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள பெண்கள் பள்ளிக்கூடங்கள் அடிக்கடி தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றன. கில்கிட் பாலிஸ்தான் பகுதியில் டயாமர் மாவட்டத்தில் இரவு அடையாளம் தெரியாத நபர்களால், 12 பள்ளிக்கூடங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ‘‘இதுவரை 12 பள்ளிக்கூடங்கள் எரிக்கப்பட்டு உள்ளதாக புகார்கள் வந்து உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட பாதி பள்ளிக்கூடங்கள் மாணவிகள் மட்டுமே படிக்கிற பெண்கள் பள்ளிக்கூடங்கள் ஆகும். பள்ளிக்கூடங்களில் சிலவற்றில் இருந்து பாடப்புத்தகங்கள் வெளியே எடுத்து வரப்பட்டு தீயிட்டுக் கொளுத்தப்பட்டு உள்ளன’’ என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக போலீஸ் படைகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்களுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. எரிக்கப்பட்ட பள்ளிக்கூடங்களில் இரண்டில் இருந்து வெடிச்சத்தம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
பள்ளிக்கூடங்கள் எரிக்கப்பட்டதில் கொந்தளித்துப்போன மக்கள் அந்தப் பகுதியில் அமைந்து உள்ள சித்திக் அக்பர் சவுக்கில் போராட்டம் நடத்தினர். பயங்கரவாத இயக்கங்கள் எதுவும் பொறுப்பு கூறவில்லை. கடந்த காலங்களில் வடமேற்கு பாகிஸ்தானில் நூற்றுக்கணக்கான பள்ளிக்கூடங்களில் தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.