பிரித்தானியாவில் பிஞ்சு குழந்தையை பேய்த்தனமாக உலுக்கியே மரணத்திற்கு காரணமான பெற்றோர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த இச்சம்பவம் தொடர்பாக பர்மிங்காம் கிரவுன் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. மேற்கு மிட்லாண்ட்ஸ் பகுதியில் உள்ள பில்ஸ்டனில் இருந்து அவசர மீட்பு குழுவினருக்கு அழைப்பு வந்துள்ளது.
சம்பவப்பகுதிக்கு விரைந்த குழுவினர் 6 மாத குழந்தை ஒன்று மாரடைப்பால் அவதிப்பட்டு வருவது தெரியவந்தது. உடனடியாக குழந்தையை மீட்ட மருத்துவ குழுவினர் அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு குழந்தையை சேர்ப்பித்துள்ளனர். ஆனால் குழந்தை சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் மரணமடைந்துள்ளது.
குழந்தையின் மூளையில் ஏற்பட்ட காயங்களே மரணத்திற்கு காரணம் எனவும், அசுரத்தனமாக உலுக்கியுள்ளதால் குழந்தையின் முதுகெலும்புகள் உடைந்து போயுள்ளதும் மருத்துவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து பொலிசார் குழந்தையின் தந்தையான 26 வயது Ricky Walker மீது வழக்கு பதிவு செய்தனர்.
பிஞ்சு குழந்தையை மரணத்திற்கு தள்ளியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. குழந்தை நீண்ட நேரமாக தூக்கத்தில் இருந்ததாகவும், அதை எழுப்பவே உலுக்கியதாகவும் அவர் விசாரணையில் தெரிவித்துள்ளார். ஆனால் குழந்தை இறப்பதற்கு சில வாரங்கள் முன்னர் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளதாகவும், இது அதன் பெற்றோருக்கு தெரியும் எனவும் விசாரணையில் தெரியவந்தது.மட்டுமின்றி சொந்த குழந்தையை உரிய முறையில் கவனிக்க தவறிய தாயாரையும் இந்த வழக்கில் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது.