“புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு பெரும் சவாலாக அமைவோம்”

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 39 ஆவது அமர்வின்போது புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு நாம் பெரும் சவாலாக அமைவோம் என்று உலகளாவிய தேசப்பற்றுள்ள இலங்கையர் ஒன்றியத்தின் தலைவர் வசந் கீர்திரத்ன தெரிவித்தார்.
பொரளை என்.எம்.பெரேரா நிலையத்தில் உலகளாவிய தேசப்பற்றுள்ள இலங்கையர் ஒன்றியம் ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 38 ஆவது அமர்வில் நாம் கலந்துகொண்டிருந்தோம். அதன்போது எமது நாட்டுக்கு எதிராக புலம்பெயர் தமிழ் அமைப்புகள் எந்தளவிலான கெடுபிடிகளை மேற்கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டபோதும், அது சர்வதேச நாடுகளில் முன்னெடுப்பட்டு வருவதனை அவதானிக்க முடிகிறது. அந்த நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலும் காண முடிகிறது. எமது படைப்பிரிவை எவ்வாறாவது தண்டிக்க வேண்டும் என்பதில் அத்தரப்பினர் உறுதியாகவுள்ளனர்.
மேலும் மனித உரிமைகள் பேரவை அமர்வில் கலந்துகொண்ட, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களை அடிப்படையாகக்கொண்ட அமைப்புகள் இராணுவத்திற்கு எதிராகவும் அப்போதைய அரசியல் தலைவர்களுக்க எதிராகவும் பொய்க்குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தன.
ஆகவே எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 19 ஆம் திகதி ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவைின் 39 ஆவது கூட்டத்தொடரில் நாம் கலந்துகொள்ளவுள்ளதுடன் நாட்டுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை எதிர்க்கவுள்ளோம்.
அதற்கான வேலைத்திட்டங்களை தற்போது முன்னெடுத்து வருகறோம். அது தொடர்பில் சர்வதேச தரப்பினரை விழிப்புணர்வூட்டும் மாநாடுகளையும் முன்னெடுத்து வருவதுடன் இங்கிலாந்திலுள்ள யுத்த விவகாரங்களுடன் தொடர்புபட்ட நிபுணர்களின் ஆலோசனைகளையும் பெற்றுள்ளோம் என்றார்.