India

பேய்மழை, வெள்ளப்பெருக்கால் உருக்குலைந்த கேரளா!

திருவனந்தபுரம்: ‘தெய்வத்தின் சொந்த நாடு’ என்று கேரளாவுக்கு ஒரு பெயர் உண்டு. நல்ல காலநிலை, எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேல் என காட்சியளிக்கும் இயற்கை சூழல் என பல காரணங்களால் கேரளாவுக்கு இந்த பெயர் கிடைத்தது. ஆனால் இன்றைய தேதிக்கு ‘தெய்வத்தின் சொந்த நாடு’ என்பதை மாற்றிவிட்டு தெய்வத்தால் சபிக்கப்பட்ட நாடு என அழைப்பது தான் சரியாக இருக்கும் என்று கேரள மக்களே கூறத்தொடங்கி விட்டனர். கடந்த சில தினங்களுக்கு முன் கொட்டித் தீர்த்த வரலாறு காணாத பேய்மழையால் கேரளாவுக்கு ஏற்பட்ட பேரழிவு தான் அதற்கு காரணமாகும். இந்தியாவில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை தவறாமல் பெய்யும் மாநிலங்களில் கேரளா முதலிடத்தில் உள்ளது. ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை செப்டம்பர் வரை பெய்யும். பின்னர் அக்டோபரில் வடகிழக்கு பருவமழை பொழிய தொடங்கும். சில வருடங்களில் டிசம்பர் வரை இந்த பருவமழை நீடிக்கும். சுருக்கமாக சொன்னால் சில சமயங்களில் வருடத்தில் 7 மாதங்கள் வரை மழை பெய்யும். எவ்வளவு மழை பெய்தாலும் இதுவரை மழையால் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு கேரளாவில் பேரழிவு ஏற்பட்டதில்லை.

ஆனால் இந்த வருடம் பெய்த பேய் மழை கேரளாவையே உருக்குலைத்து விட்டது என்று தான் கூறவேண்டும். ஒரு புதிய கேரளாவை நாம் உருவாக்கும் நிலையில் இருக்கிறோம் என்று கேர முதல்வர் பினராய் விஜயன் கூறும் அளவுக்கு கேரள மாநிலத்தின் நிலைமை படுமோசமாக உள்ளது.கேரளாவின் அண்டை மாநிலமாக இருந்த போதிலும் அங்கு பெய்யும் மழையில் மூன்றில் ஒரு பகுதி கூட தமிழ்நாட்டில் பெய்வதில்லை. தமிழ்நாட்டில் ஒரு வருடத்திற்கு சராசரியாக 945 முதல் 998 மி.மீ. வரை மழை கிடைக்கும். ஆனால் கேரளாவில் வருடத்தில் சராசரியாக 3055 மி.மீ. வரை பருவமழை பெய்யும். இந்த வருடம் குறிப்பாக ஆகஸ்ட் 1ம் தேதிக்கும், 20ம் தேதிக்கும் இடையே மூன்றே வாரத்தில் மட்டும் 771 மி.மீ. மழை கொட்டித் தீர்த்தது. வழக்கமாக இந்த சமயத்தில் சராசரியாக 288 மி.மீ. மழை தான் பெய்யும். ஆனால் இவ்வருடம் 164 சதவீதம் கூடுதல் மழை பெய்தது. இடுக்கி மாவட்டத்தில் தான் இந்த கால அளவில் மிக பலத்த மழை பெய்தது. ஆகஸ்ட் மாதத்தில் முதல் 3 வாரத்தில் 1419 மி.மீ. மழை பெய்தது. இது கடந்த 111 வருடத்தில் பெய்த மிக அதிக மழையாகும். வழக்கமாக ஜூன் முதல் ஆகஸ்ட் 20ம் தேதி வரை கேரளாவில் சராசரியாக 1650 மி.மீ. மழை பெய்யும். ஆனால் இவ்வருடம் இதுவரை 2346.3 மி.மீ. மழை பெய்துள்ளது. இது சராசரியை விட 42 சதவீதம் கூடுதலாகும். இந்த வருடம் கேரளாவில் சராசரியை விட சிறிது குறைவாகவே பருவமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது.

ஆனால் இந்த கணிப்பை தவிடுபொடியாக்கி கொட்டித் தீர்த்த பேய்மழை கேரளாவை சின்னாபின்னமாக்கி விட்டது என்றே கூறவேண்டும். கேரளாவின் மிகப்பெரிய அணையான இடுக்கி அணை வரலாற்றில் முதல் முறையாக அனைத்து மதகுகளையும் திறக்கும் அளவுக்கு நிலைமை மோசமானது. தொடர் மழையால் முல்லைபெரியாறு, இடுக்கி, மலம்புழா, பானாசுரசாகர் உட்பட கேரளாவிலுள்ள அனைத்து அணைகளுமே நிரம்பி வழிந்தன. இதன் காரணமாக எல்லா அணைகளும் அடுத்தடுத்து திறக்கப்பட்டன. கேரள வரலாற்றில் அனைத்து அணைகளும் ஒரே சமயத்தில் திறக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இது தான் கேரள மாநிலத்தின் பேரழிவுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. கேரளாவில் மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் திருவனந்தபுரம், கொல்லம், கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய 4 மாவட்டங்கள் தவிர மீதமுள்ள 10 மாவட்டங்களும் வெள்ளத்தில் மிதந்தன. இதன் காரணமாக ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளாக மாறும் சூழல் ஏற்பட்டது. மாநிலம் முழுவதும் 3500க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் 13 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்க வைக்கப்பட்டனர். பல நாட்கள் ரயில், பஸ் மற்றும் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழை முடிந்து பல நாட்களுக்குப் பிறகும் செங்கணூர், குட்டநாடு, பந்தளம் உட்பட பல பகுதிகள் இன்னும் வெள்ளத்தில் மிதக்கின்றன.

இந்த வெள்ளப்பெருக்கால் உண்ண உணவின்றி, குடிக்க நீரின்றி ஆயிரக்கணக்கானோர் பரிதவித்தனர். வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் கட்டிய வீடு வெள்ளத்தில் சிக்கி சின்னாபின்னமானதை பார்த்து அதிர்ச்சியடைந்து 3 பேர் தற்கொலை செய்த சம்பவமும் நடந்தன. பல ஆயிரம் கோடி மதிப்பில் போடப்பட்ட சாலைகள் சேதமடைந்தன. இடுக்கி மாவட்டத்தில் 80 சதவீத சாலைகளும் சேதமடைந்து விட்டன. சபரிமலை ஐயப்பன் கோயில் வரலாற்றில் பக்தர்களால் தரிசனத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. சபரிமலை அருகே பம்பை ஆறு திசை மாறி ஓடிக்கொண்டிருக்கிறது. வருடந்தோறும் நிறை புத்தரிசி பூஜை, ஆவணி மாத பூஜை மற்றும் ஓணம் பண்டிகை பூஜைகளை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருவார்கள். ஆனால் இவ்வருடம் இந்த 3 பூஜைகளுமே பக்தர்கள் இல்லாமலேயே நடந்தது.முதற்கட்ட கணக்கெடுப்பின் படி குறைந்தது ₹20,000 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. வெள்ளம் வடிந்த பிறகு சேத மதிப்பு மேலும் அதிகரிக்கும். அனைத்தையும் இழந்து நிற்கும் கேரள மக்களுக்கு தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா உட்பட பிற மாநிலங்கள், தனியார் நிறுவனங்கள், நடிகர்கள், பொதுமக்கள், வெளிநாடுகள் என பலரும் போட்டி போட்டு உதவி வருகின்றனர். அனைவரின் உதவியுடனும் கேரளா மீண்டும் தெய்வத்தின் சொந்த நாடாக மாறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top