India

பொதுக்குழுவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு திமுக தலைவரானார் ஸ்டாலின்: தமிழகம் முழுவதும் தொண்டர்கள் உற்சாகம்

சென்னை: திமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவராக மு.க.ஸ்டாலின் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு தேசிய, மாநில தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர். திமுக பொதுக்குழு கூட்டம் சென்னை அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று காலை நடந்தது. கருணாநிதி மறைவுக்கு பிறகு இந்த கூட்டம் நடப்பதால் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. திமுக தலைவர், பொருளாளர் தேர்தல் முடிவுகளும் இதில் அறிவிக்கப்பட இருந்தது. இதனால் திமுக தொண்டர்கள் அதிகாலை முதலே அண்ணா அறிவாலயத்தில் குவியத் தொடங்கினர். இதனால் அண்ணா அறிவாலயமே கோலாகலமாக காணப்பட்டது.

இந்நிலையில் நேற்று காலை 9.25 மணிக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவாலயம் வந்தார். அவருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். கருணாநிதி மேடைக்கு வரும் போது ஒலிபரப்பப்படும் ‘‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’’ என்ற பாடல் ஒலிபரப்பப்பட்டது. இதனால் தொண்டர்கள் பெருத்த ஆரவாரம் எழுப்பினர். முன்னதாக மு.க.ஸ்டாலின் கோபாலபுரம் சென்று கருணாநிதி படத்துக்கு மரியாதை செலுத்தினார். தாயார் தயாளு அம்மாவிடம் வாழ்த்து பெற்றார். மு.க.ஸ்டாலின் வந்ததும் காலை 9.35 மணிக்கு பொதுக் குழு கூட்டம் தொடங்கியது. மேடையின் எதிரே பார்வையாளர் வரிசையில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் அமர்ந்தனர். மேடையில் அண்ணா, கருணாநிதி உருவப்படங்கள் வைத்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. தொண்டர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அரங்கத்துக்கு வெளியே துணிப் பந்தல்கள் அமைத்து டிவிக்கள் மூலம் நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டன.

பொதுக்குழு கூட்டத்திற்கு திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். திமுக தலைவர் கருணாநிதி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், சோம்நாத் சாட்டர்ஜி, சுர்ஜித்சிங் பர்னாலா, ஐ.நா.சபை முன்னாள் பொதுச்செயலாளர் கோபி அன்னன் ஆகியோருக்கும் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கும், கேரள வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அனைவரும் 2 நிமிடம் மவுனமாக எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். பின்னர் தணிக்கைக்குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின் பொதுச்செயலாளர் அன்பழகன் தேர்தல் முடிவை வெளியிட்டு கூறியதாவது: திமுக தலைவராக மு.க.ஸ்டாலினை முன்மொழிந்தும் வழிமொழிந்தும் 1,107 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வேறு யாரும் போட்டியிடாததால் மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்றார். இந்த தகவலை அறிந்ததும் திமுகவினர் பட்டாசு, வாணவெடிகள் வெடித்து மகிழ்ந்தனர். இனிப்பு வழங்கினர். மேள தாளங்கள் முழங்க நடனமாடி கொண்டாடினர்.

பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் பெயரை 252 பேர் முன்மொழிந்துள்ளதாகவும் அவரும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்றும் அன்பழகன் கூறினார். அன்பழகன் அறிவிப்பை தொடர்ந்து காலை 10.35 மணிக்கு மு.க.ஸ்டாலின் மேடைக்கு சென்றார். கருணாநிதி உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அன்பழகன் காலை தொட்டு வணங்கினார். அவருக்கு அன்பழகன் பொன்னாடை அணிவித்து கன்னத்தை தட்டி வாழ்த்து தெரிவித்தார். அப்போது கூட்டத்தில் இருந்தவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

அதைத் தொடர்ந்து திமுகவில் செயல் தலைவர் பதவி நீக்கப்படுவதாகவும் மாவட்டங்கள் பிரிப்பது, தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பது பற்றியும் விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்களை அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறினார். மாவட்ட திமுக அலுவலகங்களில் நூலகம் அமைக்க வேண்டும் என்ற திருத்தமும் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து கருணாநிதிக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற தனித் தீர்மானத்தை திருச்சி சிவா எம்.பி. முன்மொழிந்தார். திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதை வரவேற்று குத்தாலம் கல்யாணம் தீர்மானம் முன்மொழிந்தார்.

அதைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலினை வாழ்த்தி கி.வேணு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மூக்கையா, ஆ.ராசா, அறந்தை ராஜன், சக்கரபாணி, ஏ.கே.எஸ்.விஜயன், மு.பெ.சாமிநாதன், ரகுமான்கான், எ.வ.வேலு, பழனிமாணிக்கம், பொங்கலூர் பழனிச்சாமி, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் தயாநிதி மாறன், திருச்சி சிவா, கனிமொழி, துணைப் பொதுச் செயலாளர்கள் வி.பி. துரைசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஐ.பெரியசாமி ஆகியோர் பேசினர். மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் ஏற்புரையாற்றினர். அதையடுத்து பகல் 12. 30 மணிக்கு பொதுக்குழு கூட்டம் முடிவடைந்தது.

பின்னர் மு.க.ஸ்டாலின், அண்ணா நினைவிடம், கருணாநிதி நினைவிடம், பெரியார் நினைவிடம் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மாலை 5.30 மணிக்கு அண்ணா அறிவாலயம் வந்த மு.க.ஸ்டாலின் கருணாநிதி அறைக்கு சென்று தலைவராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அவருக்கு திமுக முன்னணியினர், தொண்டர்கள் கட்சி தலைவர்கள் ஏராளமானவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top