Canada

மனித உரிமைகளை ஊக்குவிக்க ஜேர்மனியின் ஆதரவை கோரும் கனடா!

உலகம் முழுவதும் மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்கான ஒட்டாவா பிரசாரத்திற்கு ஆதரவளிக்குமாறு கனடா ஜேர்மனியை வலியுறுத்தியுள்ளது. பெர்லினில் நேற்று நடைபெற்ற ஜேர்மன் தூதுவர்களின் வருடாந்த கூட்டத்தில் உரையாற்றிய கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலண்ட் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த கிறிஸ்டியா ஃப்ரீலண்ட், ”உலகளாவிய ரீதியில் பெண் உரிமை உள்ளிட்ட மனித உரிமைகளை நிலைநிறுத்துவதற்கு கனடா பாடுபடும்.

எமது இந்த நிலைப்பாட்டிற்கு ஜேர்மனியின் ஆதரவை எதிர்பார்க்கின்றோம். சிரிய அகதிகள் நெருக்கடி காரணமாக ஜேர்மன் மாத்திரமின்றி ஐரோப்பா முழுவதும் கடுமையான சவால்களை எதிர்நோக்கி வருகின்றது. இதற்கு எமது அனுதாபங்களை பகிர்ந்துக் கொள்கின்றோம்” எனத் தெரிவித்தார். ரியாத்துடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், அதனை சரி செய்துக் கொள்வதற்காக முயற்சித்துவரும் ஜேர்மனி, கனடாவிற்கும் ஜேர்மனிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலை தொடர்பில் மௌனம் காத்துவருகிறது.

சவுதி அரேபியாவில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சவுதி அரேபிய பெண்களின் உரிமைக்காக போராடிய சமர் பேடாவி கைது செய்யப்பட்டார். இதுகுறித்து பேசிய கனடா அமைச்சகம், சவுதி அரேபிய பெண்கள் தங்கள் உரிமைக்காக போராடுகின்றனர். அவர்களை அரசு கைது செய்வது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தது. இந்நிலையில், சவுதி அரேபியாவின் உள் விவகாரங்களில், கனடா அரசு தலையிடுவதாக தெரிவித்து இரு தரப்பிற்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top