News

மஹிந்தவிடம் குற்றப்புலனாய்வினர் வாக்குமூலம்.

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் நேற்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டுக்கு நேரில் சென்று வாக்குமூலம் பெற்றனர்.

இதன்போது முன்னாள் ஜனாதிபதி சுமார் 03 மணித்தியாலங்களுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் அறுவர் அடங்கிய குழுவினரே நேற்று இந்த விசாரணையை முன்னெடுத்தனர்.

தனிப்பட்ட அலுவல்களின் நிமித்தம் வெளியில் சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி மீண்டும் காலை 11.30 மணியளவில் வீடு திரும்பினார். அதுவரை அவரது இல்லத்தில் காத்திருந்த குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் அவருடைய வருகையையடுத்து விசாரணைகளை ஆரம்பித்தனர்.

காலை 11.30 மணிக்கு ஆரம்பமான விசாரணை பிற்பகல் 1.45 மணிவரை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.

ஊடகவியலாளர் கீத் நொயரின் கடத்தல் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று 17 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதியின் வீட்டுக்கு வருகை தரவிருப்பதாக ஏற்கனவே அறிவித்தல் விடுத்திருந்தது. கீத் நொயர் கடந்த 2008 ஆம் ஆண்டு மே 22 ஆம் திகதியன்று தெஹிவளை வைத்திய வீதியிலுள்ள அவரது இல்லத்திலிருந்து கடத்திச் செல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் சபாநாயகர் கரு ஜயசூரியவிடமிருந்தும் வாக்குமூலத்தைப் பெற்றுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top