மஹிந்தவிடம் நேரில் சென்று கோரிக்கை விடுத்த சம்பந்தன்!

மீண்டும் ஆட்சி அதிகாரத்தைப் பிடிப்பதற்காக புதிய அரசமைப்பை பயன்படுத்த வேண்டாம் என்று மஹிந்த ராஜபக்சவிடம் கூறியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைக்கும் தீர்வை சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மைத்திரி – மஹிந்த இணைந்து முன்வைக்கும் தீர்வையே சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணி தெரிவித்துள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், புதிய அரசமைப்பு உருவாக்கச் செயன்முறைகளுக்கு முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் தருமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிடம் பல தடவைகள் நான் நேரில் வேண்டுகோள் விடுத்துள்ளேன். கொழும்பில் அண்மையில்கூட நேரில் சந்தித்த போதும் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளேன். தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் தொடர்பில் மஹிந்தவும், அவரின் பொது எதிரணியும் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும்.
நாடு மீண்டும் இருண்ட யுகத்துக்குச் செல்வதை தடுப்பதற்காக தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை விரைந்து காண வேண்டும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான பொது எதிரணியினர் முழுமையான ஆதரவைத் தர வேண்டும் போலிப் பரப்புரைகளையும் இனவாதகக் கருத்துக்களையும் நடைமுறைக்குச் சாத்தியமற்ற உரைகளையும் அவர்கள் கைவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசமைப்பு விவகாரத்தில் மஹிந்த அணியினர் கடைப்பிடிக்கும் அணுகுமுறை நாட்டு மக்களிடையே அமைதியின்மையைத் தோற்றுவிக்கக் கூடிய ஆபத்தைக் கொண்டிருக்கின்றது. நாட்டு மக்களின் நலன்கருதி புதிய அரசமைப்பு விவகாரத்தில் மைத்திரி – ரணில் தலைமையிலான அரசுடன் இணைந்து அவர்கள் பயணிக்க வேண்டும். தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கு கிடைத்துள்ள இந்தச் சந்தர்ப்பத்தை நாம் தவறவிட்டால், நாடு இன்னொரு இரத்தக்களரியைச் சந்திக்க வேண்டி வரும். நியாயமான அரசியல் தீர்வைக் காண்பதற்கு நிதானமான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொது எதிரணியிடம் நான் மீண்டும் மீண்டும் வேண்டுகோள் விடுக்கின்றேன் எனவும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.