News

வடக்கில் 88 வீத காணிகள் உரிமையாளரிடம் கையளிப்பு!

வடக்கில் படையினர் வசமுள்ள காணிகளை விரைவில் விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் வடக்கு – கிழக்கு அபிவிருத்திக்கான செயலணி மூலம் செயற்திட்டங்கள் விரைவுபடுத்தப்படும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். யாழ். மயிலிட்டி பகுதியில் பெருந்திரளான மக்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி; வடக்கில் படையினர் வசமுள்ள காணிகளில் 88 வீதமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் மீதான 12 வீத காணிகள் விரைவில் விடுவிப்பதில் முக்கிய கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, மயிலிட்டி பிரதேசத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் இரண்டு வாரங்களில் விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அடுத்தவாரம் கொழும்பில் நடைபெறவுள்ள வடக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணிக் கூட்டத்திற்கு கட்சி, நிறம், பிரதேச பேதமின்றி அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

யாழ். மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தின் மீள் நிர்மாணப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு வைபவம் நேற்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது.

துறைமுகத்தின் புனரமைப்பு மற்றும் அதன் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்கும் நிகழ்வுகள் ஜனாதிபதியினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. 400 மில்லியன் ரூபா செலவில் இந்த செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

நேற்யை நிகழ்வுகளில் ஜனாதிபதியுடன் அமைச்சர் விஜித விஜிதமுனி சொய்சா, பிரதியமைச்சர்கள் அங்கஜன் இராமநாதன், காதர் மஸ்தான், இராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆரச்சி, வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களான மாவை சேனாதிராஜா, சரவணபவன், வட மாகாண அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

அடிக்கல் நாட்டும் நிகழ்வையடுத்து இடம்பெற்ற மாபெரும் மக்கள் பேரணிக் கூட்டத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது;

2015 ஜனாதிபதித் தேர்தலில் 80 விதமான வடக்கு மக்கள் எனக்கு ஆதரவளித்தனர். இந்த மூன்றரை வருடங்களில் பல்வேறு செயற்திட்டங்கள் வடக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

நான் ஜனாதிபதி ஆவதற்கு முன்பு வடக்கிற்கு சுதந்திரமாக செல்லமுடியாத நிலையே காணப்பட்டது. அதேவேளை தெற்கைப் போன்றே வடக்கும் சர்வதேசத்தின் குற்றச்சாட்டுக்கு உட்பட்டிருந்தது. அதனை நாம் நிவர்த்தி செய்துள்ளோம்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதி என்ற வகையில் நாம் வடக்கிற்கு பெருமளவு நிதி ஒதுக்கி வருகின்றோம். எவ்வாறெனினும் அபிவிருத்தி வேகம் காணாது என்பதை குறிப்பிட முடியும்.

எந்த ஜனாதிபதியும் என்னைப் போல் வடக்குக்கு விஜயம் செய்ததில்லை. நான் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை விஜயம் செய்து வருகிறேன். இது விநோத சவாரியல்ல. மக்கள் பிரச்சினைகளை இனங்கண்டு விரைவான தீர்வு காண்பதையே மேற்கொண்டு வருகின்றேன்.

காணி விடுவிப்பு தொடர்பில் மாவை தமதுரையில் குறிப்பிட்டார். இதற்கிணங்க 2009 தொடக்கம் இதுவரை 88 விதமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிட வேண்டும். 12 விதமான காணிகளை விரைவாக கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்களது காணி மீள மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாகவுள்ளேன். காணிப் பிரச்சினைகளே பல நாட்டினதும் புரட்சிகளுக்கும் வழி வகுத்துள்ளதை குறிப்பிட முடியும்.

மயிலிட்டி பிரதேச காணிகளை விரைவாக மக்களுக்குக் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அது தொடர்பில் இராணுவத் தளபதி மற்றும் வடக்கிலுள்ள கட்டளைத் தளபதி ஆகியோருடன் நான் தொலைபேசி மூலம் தற்போது பேசினேன்.

இதற்கிணங்க இன்னும் இரு வார காலங்களில் மயிலிட்டி மகா வித்தியாலயம் உட்பட இப்பிரதேச பாடசாலைகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோன்று; மகாவலி பிரதேச மக்கள் இப்பகுதியில் குடியேற்றப்படுவதாக கூறப்படும் விடயம் தொடர்பில் நான் கவனம் செலுத்துவேன்.

போதை ஒழிப்பு போன்ற தெற்கிற்கும் பொதுவான பிரச்சினைகள் வடக்கிலும் உள்ளன. எமது நாடு ஒரு தீவு என்பதால் போதை வர்த்தகத்துக்கு அது பெரும் வாய்ப்பாகியுள்ளது. எவ்வாறெனினும் போதை குற்றம் தொடர்பில் குற்றவாளியாகக் காணப்படும் எவருக்கும் மன்னிப்புக் கிடையாது. மரண தண்டனை வழங்கவும் பின்னிற்கப் போவதில்லை.

குடிநீர் பிரச்சினைக்கு களுகங்கை திட்டம் மூலம் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும். அதன் இரண்டாம் கட்ட வேலைத்திட்டம் இரணைமடுவுக்கான நீரை வழங்கும். மயிலிட்டி துறைமுக புனர் நிர்மாணப்பணிகள் வடக்கு மட்டுமன்றி நாட்டின் பொருளாதாரத்திற்குப் பெரும் பங்களிப்பை வழங்கக்கூடிய செயற்பாடாகும். இந்நிகழ்வில் சிவாஜிலிங்கம் போன்றோர் உட்பட அனைத்துத் தரப்பினரும் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

மயிலிட்டி துறைமுகம் யுத்தத்துக்கு முன்னர் நாட்டுக்குத் தேவையான மீனில் மூன்றில் ஒரு பங்கைப் பெற்றுத் தந்த துறைமுகமாகும்.

இந்த துறைமுகத்தின் முதற்கட்ட அபிவிருத்திப் பணிகளில் அமரர் எஸ். ஜே. வி. செல்வநாயகம் சம்பந்தப்பட்டுள்ளார் என்பது பெருமையுடன் நினைவுகூரத்தக்கது.

அதன்பின்னர் 1980 களில் அன்றைய பிரதமர் ஆர். பிரேமதாச அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டார். எனினும் கடந்த ஒரு வருடகால யுத்தம் அதனை முழுமையாக அழித்துவிட்டது.

யுத்தத்தினால் அனைத்து மக்களும் பேரவலங்களை சந்தித்துள்ளனர். மாவை தமக்கு ஏற்பட்ட அவலத்தை தெரிவித்தார்.

அமிர்தலிங்கத்தையும் அவர் நினைவு கூர்ந்தார். இதற்கிணங்க நீலன் திருச்செல்வம், லக்ஷ்மன் கதிர்காமர் போன்ற புகழ்மிக்க தலைவர்களும் யுத்தத்தினால் அழிந்துள்ளனர்.

இந்த வகையில் மீள நாட்டில் யுத்தமொன்று ஏற்படாத வகையில் செயற்படுவது எவ்வாறு என்பது பற்றியே நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும்.

மாவை சேனாதிராஜா தமது மக்களின் பிரச்சினைகளை எடுத்துக் கூறினார். பல்வேறு கோரிக்கைகளையும் அவர் முன்வைத்தார். தமது மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் குரல் எழுப்புவதும் அதற்காகப் போராடுவதும் தலைவர்களின் பொறுப்பாகும்.

அதேவேளை; கடந்த காலங்களில் ஜனாதிபதி முன்னிலையிலேயே அவர் பற்றி பேசுவது கஷ்டமானது. எனினும் எமது அரசாங்கத்தில் நாம் அதற்கான சுதந்திரத்தை வழங்கியுள்ளோம்.

இக்காலங்களில் எனக்கு எதிராக சமூகவலைத்தளங்கள் மிக மோசமாக விமர்சித்தும் தூற்றியும் வருகின்றன. எனினும் கடந்த ஆட்சிக் காலத்தில் இவ்வாறு செயற்பட்டிருந்தால் நடப்பதே வேறு. ஆறடி மண்ணே சொந்தமாகியிருக்கும். என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top