News

விக்கிக்கு தவராசா மீண்டும் பதிலடி

“கூரை ஏறிக் கோழி பிடிக்கமுடியாத தவராசா வானம் ஏறி வைகுண்டத்தில் காலம் கழிக்கிறார்” என வடக்கு மாகாண எதிர்க் கட்சித் தலைவரைக் கிண்டல் செய்த வடக்கு முதல்வருக்கு மீண்டும் பதிலடி கொடுத்திருக்கிறார் தவராசா.

ஆடத்தெரியாத முதலமைச்சர் மேடையே கோணல் என்று கூறிக் கொண்டே இருப்பார் என்று அவர் முதல்வரைச் சாடியும் உள்ளார்.

இது தொடர்பில் தவராசா வெளியிட்ட கேள்வி – பதில் அறிக்கை வருமாறு,

கேள்வி: தங்கள் கட்சி தங்களை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கியும் அவைத் தலைவரின் ஆசியினாலேயே தாங்கள் அப் பதவியில் உள்ளதாகவும், எமது (மாகாண சபையின்) அதிகாரங்களை மற்றவர்கள் மடக்கிப் பிடித்ததால்தான் நாங்கள் (மாகாண சபை) பல பிரச்சினைகளுக்கு முகங் கொடுத்து வருவதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளாரே. அது பற்றித் தங்கள் கருத்து என்ன?

பதில்: நான் இன்றோ நேற்றோ பதவிக்காக அரசியலுக்கு வந்தவனும் அல்லன். ‘வாயால் வடை சுடுபவனும்’ அல்லன்.
‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ என்பார்கள். இருக்கின்ற அதிகாரங்களை வினைத்திறனாகச் செயற்படுத்துவதற்கு ஆளுமையும், விவேகமும் தேவை. அங்குதான் எமது திறமையை வெளிக்காட்டல் வேண்டும். வடக்கு மாகாண சபை கடந்த 5 வருடங்களில் எங்களுக்கு இருக்கும் அதிகார வரம்புக்குள் வினைத்திறனாகச் செயற்பட்டு எத்தனையோ விடயங்களைச் செயற்படுத்தி இருக்க முடியும். அந்த இயலாத் தன்மையை நிரூபிக்க என்னிடம் நிறைய ஆதாரங்கள் உண்டு. ஆதலினாற்தான் முதலமைச்சரைப் பகிரங்க விவாதத்துக்கு வருமாறு கோரியுள்ளேன். தற்போதும் கோரி வருகின்றேன். முதலமைச்சர் தான் கடந்த ஐந்து வருடங்களில் மாகாண சபையை வினைத்திறனாகச் செயற்படுத்தியுள்ளார் என்பதைப் பகிரங்க விவாதத்தில் நிரூபித்துக் காட்டட்டும். நான் எதிர்க் கட்சித் தலைவர் பதவியிலிருந்து அல்ல, அரசியலில் இருந்தே ஓய்வு பெறுகின்றேன்.

மாகாண சபையின் அசமந்தப் போக்கினால் நாம் இழந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களோ ஏராளம். அபிவிருத்தி என்பது ஏதோ கெஞ்சிப் பெறும் விடயமல்ல. அது எமது உரிமை யின் ஓர் அம்சம். ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்திக்கான உரிமை சாசனம் இதனைத் தெட்டத் தெளிவாகக் குறிப்பிடுகின்றது.

பதவி மோகத்தினால் நான் மாகாண சபையின் செயற்பாட் டின்மையை விமர்சிக்கவில்லை. நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக நான் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றேன். தமிழ் மக்களின் உரிமைக்கான ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் நானும் ஒருவன். பொன் சிவகுமாரன், லோறன்ஸ் திலகர், பொன் சத்தியசீலன் போன்றோருடன் ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களிலிருந்தே செயற்படுபவர்களில் நானும் ஒருவன். மாவை சேனாதிராசா, வண்ணை ஆனந்தன், காசி ஆனந்தன், குட்டிமணி, தங்கத்துரை, புஸ்பராஜா, வரதராஜப் பெருமாள், பாலகுமார் போன்றோருடன் சம காலத்தில் சிறையில் இருந்தவன்.

அண்மையில்தான் அரசியலுக்கு வந்த முதலமைச்சருக்கு நான் இங்கு குறிப்பிடும் பெயர்களே சில வேளைகளில் தெரி யாமலிருக்கலாம்.

சந்திரிகா அம்மையாரின் ஓகஸ்ட் 2000ஆம் ஆண்டு புதிய அரசமைப்பு வரைவு தொடர்பான அமர்வுகளில் தொடர்ச்சியாகப் பங்கேற்றுப் பங்களிப்புச் செய்தவர்களில் நானும் ஒருவன். பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வ கட்சி மாநாட்டு (2006/2007) தொடர் அமர்வுகளில் வடக்கைச் சேர்ந்த தனி மனிதனாக நின்று தமிழர்களின் உரிமையை அங்கீகரிக்கும் வண்ணம் அரசமைப்பு வரைவை ஏற்படுத்தக் கூடிய வகையிலான அறிக்கையைத் தயாரிப்பதில் பாரிய பங்களிப்பை வழங்கியவன்.

தற்போதைய அரசியல் யாப்பு வரைவுக்கான பொது மக்கள் கருத்தறியும் குழுவின் உறுப்பினராக இருந்து அந்தக் குழுவின் அறிக்கையில் அதிகாரப் பகிர்வு தொடர்பான விடயங்களில் 13ஆவது திருத்தத்தில் உள்ள குறைபாடுகள் எல்லாவற்றையும் நிவர்த்தி செய்யும் வகையில் அறிக்கையைத் தயாரிப்பதில் முழுமையாகப் பங்களிப்புச் செய்தவன். அத்துடன் அரசமைப்புச் சபையின் மத்தி – மாகாணங்களுக்கிடையிலான உறவு தொடர்பான நிபுணத்துவ உறுப்பினராக இருந்து அதன் அறிக்கை வரைவில் அதேபோல் பங்காற்றியுள்ளேன்.

13ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள குறைபாடுகளை முழுமையாக இனங்கண்டு அவற்றை நிவர்த்தி செய்யும் விதத்தில் அரசமைப்பு மாற்றம் அல்லது திருத்தம் அமையக் கூடிய வகையிலேயே எனது முன்மொழிவுகள் எப்போதும் அமைந்திருந்தன. எனது இந்த நிலைப்பாட்டையே முதலமைச்சரும் கொண்டிருப்பதனால்தான் முதலமைச்சர் சார்பில், அன்றைய அமைச்சர் குருகுலராஜாவையும் இணைத்துச் சென்று, அரசமைப்புச் சபையின் வழிப்படுத்தும் குழுவின் முன்னால் நான் பரிந்துரைகளை வழங்கியிருந்தேன்.

13ஆவது திருத்தச் சட்டத்தில் குறைபாடுகள் உள்ளன அல்லது அதனை முழுமையாகச் செயற்படுத்துவதில் தடைகள் உள்ளன என்பதற்காக அது முற்றாக நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்றல்ல. கூட்டுறவுத்துறை, கல்வி (வடக்கில் இயங்கும் 1098 பாடசாலை களில் 22 தேசிய பாடசாலைகள் தவிர), சுகாதாரம் (யாழ் போதனா வைத்தியசாலை தவிர 110 வைத்தியசாலைகள்), விவசாயம்……….. இவ்வாறாக 35 விடயங்கள் மாகாணத்துக்கான விடயப் பரப்பாக ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இவ் விடயப் பரப்புகளை முற்றாக மாகாண சபையின் அதிகார வரம்புக்குட்பட்ட விடயங்களாகச் செயற்படுத்துவதற்கு உபகுழுவின் ஏறத்தாழ 300 நியதிச் சட்டங்கள் வரை இயற்ற வேண்டுமென நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.இதுவரை மாகாண சபையினால் 14 நியதிச் சட்டங்களே ஆக்கப்பட்டுள்ளன.

நியதிச் சட்டங்களை ஆக்குவதற்கு மாகாண சபையில் ஆளணிப் பற்றாக்குறை இருப்பதால் துறைசார் நிபுணர்கள் ஊடாக அவற்றைத் தயாரிப்பதற்கு வெளிநாட்டுத் தூதரகங்கள் கூட உதவ முன்வந்தன. அவற்றைக் கூடப் பாவித்து மாகாண சபையினால் நியதிச் சட்டங்களை ஆக்கத் தெரியவில்லை. இவர்களது மந்தப் போக்கைக் கண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்தும், நான் மீன்பிடி தொடர்பான நியதிச் சட்டத்தை இயற்றிக் கடந்த பெப்ரவரி மாதத்தில் கொடுத்திருந்தேன். இதுவரை அதற்கு என்ன நடந்தது என்று தெரியாது.

மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட விடயப்பரப்புகளுக்கான நியதிச் சட்டங்களை ஆக்குவதன் மூலமே அவ்விடயப் பரப்புகளுக்கான மத்திய சட்டவாக்கங்களை வட மாகாணத்துக்குள் செயலிழக்கச் செய்ய முடியும். அதுவரை மாகாண விடயங்களில் மத்தியின் தலையீடு சட்ட ரீதியாகத் தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

இவ்வாறே என்னால் மாகாண சபையின் நிறைவேற்றுச் செயற் பாட்டின்மையை அடுக்கிக் கொண்டே போகலாம். ‘ஆடத் தெரியாதவர் மேடை கோணல்’ என்று கூறிக் கொண்டே இருப்பர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top