விக்னேஸ்வரனா..? மாவையா..? முதலமைச்சர் வேட்பாளர் குறித்து சிறீதரன் எம்.பி.

இலங்கை தமிழரசுக் கட்சியில், மாவை சேனாதிராஜா முதலமைச்சர் வேட்பாளராக இருக்க வேண்டும் என்பதில் கட்சி உறுப்பினர்கள் பலரும் எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். கொழும்பு வார நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்து பேசிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், “கூட்டமைப்பின் வேட்பாளர் யார் என்பது இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால் இலங்கை தமிழரசுக் கட்சியில், மாவை சேனாதிராஜா வேட்பாளராக இருக்க வேண்டும் என்பதில் கட்சி உறுப்பினர்கள் பலரும் எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளனர். இதுபற்றி கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சிகளுடன் இனிமேல் தான் பேச வேண்டும். ஆனால் தேர்தல் உரிய காலத்தில் நடக்குமா? எந்த முறையில் நடக்கும்? என்பது தெரியவில்லை.
தேர்தலே நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் வேட்பாளரைப் பற்றி பெரியளவில் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. புதிய முறையில் தேர்தல் நடக்குமாயின் ஐம்பதுக்கு ஐம்பது எனும் முறையிலேயே மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறும். மாகாண சபைகளில் எவராலும் பெரும்பான்மையை எட்ட முடியாது. அது நிச்சயம் தமிழர்களுக்குப் பாதகமானதாகவே அமையும். நடந்து முடிந்த தேர்தல் எமக்குப் பாதகமான பல விளைவுகளைத் தந்திருக்கின்றது.
விகிதாசார முறைமையை நாங்கள் முதலில் எதிர்த்தாலும் மக்கள் இப்போது அதனையே விரும்புகின்றார்கள். அல்லது 70க்கு 30 என்ற அடிப்படையில் தேர்தல் முறை மாற்றப்படுமானால் அதனை நாங்கள் நிச்சயம் வரவேற்போம். இதில் இன்னொரு விடயம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். நாங்கள் 70க்கு 30 ஆக தேர்தல் முறையை மாற்றும் போது மலையகத்திலும் மற்றும் ஏனைய இடங்களிலும் உள்ள தமிழ் மக்களின் உரிமைகள் நசுக்கப்படும்.
எனவே எங்கள் நலனை மாத்திரம் கருத்தில் கொள்வதால் தென்னிலங்கையிலும் மலையகத்திலும் உள்ள தமிழர்களின் உரிமைகள் பறிக்கும் நிலைக்குத் தள்ளப்படுவதை நாம் விரும்பவில்லை. விகிதாசார தேர்தல் முறைமையே என்னைப்பொறுத்தவரை பொருத்தமானதாய் இருக்கும்” என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.