விக்னேஸ்வரன் புறக்கணித்திருக்க கூடாது – சுமந்திரன்.

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பினால் விசேட ஜனாதிபதி செயலணியுடனான சந்திப்பு குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை. இந்த செயலணி என்ன செய்யப் போகின்றது என்பது குறித்தும் எமக்கு ஒன்றுமே தெரியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப் பதற்கான விசேட ஜனாதிபதி செயலணிக் கூட்டம் நேற்று முன்தினம் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது. இதில் வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் , அமைச்சர்கள், ஆளுநர்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் கலந்து கொண்டனர். எனினும் இந்தக் கூட்டத்தில் வடக்கு முதல்வர் சி.வி விக்கினேஸ்வரன் கலந்துகொள்ளவில்லை. அதேபோன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில் இந்த செயலணி திட்டங்கள் குறித்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்கு கொள்ளாமை குறித்தும் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணி குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு எதுவும் தெரியாது. எம்மை அழைக்கவும் இல்லை. இந்த திட்டங்கள் குறித்து எமது கட்சிக்கு அறிவிக்கவும் இல்லை. ஆகவே ஜனாதிபதி செயலணி எவ்வாறானது. அதன் வேலைத்திட்டங்கள் குறித்து எமக்கு எந்தக் கருத்தையும் முன்வைக்க முடியாது. வடக்கு கிழக்கு அபிவிருத்திகள் குறித்து நாமும் தொடர்ச்சியாக அரசாங்கத்துடன் கடந்த காலங்களில் இருந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம். ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் எதிர்க்கட்சி தலைவர் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தொடர்ச்சியாக நாம் வடக்கு -கிழக்கு அபிவிருத்தி குறித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம். இந்திய வீட்டுத்திட்டம் குறித்து நாம் அழுத்தம் கொடுத்த வண்ணமே உள்ளோம். ஐரோப்பிய ஒன்றிய வீட்டுத்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். எனினும் ஜனாதிபதி விசேட செயலணி என்ன செய்யப்போகின்றது என்பது எமக்குத் தெரியாது.
வடக்கு முதல்வர் சி.வி. விக்கினேஸ்வரன் குறித்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என ஊடகங்களில் அறிய முடிந்தது. வடக்குக் கிழக்கு பிரதிநிதிகளை புறக்கணிப்பதால் தான் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்ற கருத்தையும் முன்வைத்துள்ளார். ஆனால் ஜனாதிபதி செயலணி விக்கினேஸ்வரனை புறக்கணிக்கவில்லை. அவர் தான் கூட்டத்தை புறக்கணித்துள்ளார். ஆகவே இதில் ஜனாதிபதி செயலணி பக்கம் தவறுகள் இருப்பதாக தெரியவில்லை. வடக்கு மாகாண முதல்வர் என்ற ரீதியில் அவர் கலந்திருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.