வில்சன் அவென்யூ பகுதியில் துப்பாக்கி சூடு !

ரொறன்ரோ ஜேன் ஸ்ட்ரீட் – வில்சன் அவென்யூ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 3 பேரில், இரண்டு ஆண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 1 மணிக்கு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், மேலும் அப்பகுதியில் பல துப்பாக்கி சூடுகளும் கேட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த பகுதிக்கு பொலிஸார் சென்றபோது, இடுப்பில் துப்பாக்கி சூட்டு காயம் ஏற்பட்ட நிலையில் 20 வயது இளைஞரும், அத்துடன் துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடத்திலிருந்து சிறிது தூரத்தில், 30 வயது மதிக்கத்தக்க ஆணொருவரும் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர்களில் 20 வயது இளைஞருக்கு சிறிய காயம் என்றும், 30 வயதுடையவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், ஆனால் உயிருக்கு ஆபத்தேதும் இல்லை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர். அத்துடன் சம்பவ இடத்தில் 3 ஆவது நபருக்கு சிறிய காயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.