வீதிக்கு இறங்குகின்றோம்! கூட்டு அரசை வீட்டுக்கு அனுப்பாமல் ஓயமாட்டோம்!! – கொக்கரிக்கின்றார் மஹிந்த.

“செப்டெம்பர் 5ஆம் திகதி நாம் வீதிக்கு இறங்குகின்றோம். அன்று ஆரம்பிக்கும் போராட்டம், கூட்டு அரசை வீட்டுக்கு அனுப்பும் வரை ஓயாது. இந்த அரசை எப்படி வீட்டுக்கு அனுப்புகின்றோம் என்பதை வரவு – செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பில் பாருங்கள்.”இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பு சிங்கள ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
“செப்டெம்பர் 5ஆம் திகதி நாம் வீதிக்கு இறங்கவிருக்கின்றோம். அன்று ஆரம்பிக்கும் போராட்டம் அரசை வீட்டுக்கு அனுப்பிய பின்னரே முடிவுக்கு வரும். ரணில் வீடு செல்ல நேரிடும். அவர் எந்த வீட்டுக்குச் செல்வார் எனத் தெரியவில்லை. வரவு – செலவுத்திட்டத்தின் போது நாம் எமது கைவரிசையைக் காண்பிப்போம்.மேலும், கீத் நொயார் விவகாரத்தில் எனக்கு ஞாபகமில்லை என்று நான் கூறவில்லை. கீத் நொயாரை நான் சந்திததில்லை. ஆனால் அவர் யார் என்று எனக்குத் தெரியும்.
இந்தச் சம்பவம் நடைபெற்றபோது நாட்டில் போர் நடைபெற்றதை மறக்கவேண்டாம். இரவு பகல் பாராது நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டோம். நாட்டின் தலைவர் ஒருவருக்கு தான் செய்யும் அனைத்து விடயங்களையும் மனதில் வைத்துக்கொண்டு வாழ்நாளைக் கழிக்க முடியாது.
பல ஆண்டுகளுக்கு முன்னதாக வந்த தொலைபேசி அழைப்பு ஜனாதிபதி ஒருவருக்கு நினைவில் இருக்குமா? இப்படியொரு தொலைபேசி அழைப்பு வந்திருந்தால் நான் எனது செயலர் அல்லது பாதுகாப்பு செயலர், பொலிஸ்மா அதிபர், இராணுவத் தளபதி ஆகியோருக்கு விசாரணை செய்யுமாறு கூறியிருப்பேன். அவ்வாறான விடயங்களைக் கேட்டால் நான் எப்படிக் கூறுவது?
அடுத்த அரசு வந்தததும் இவ்வாறான விசாரணைகள் நடக்கும் போது இவர்களின் நினைவு எப்படியிருக்கும் என்று பார்ப்போம். அரசியல் பழிவாங்கலாகவே இதனைச் செய்கின்றனர்” – என்று குறிப்பிட்டுள்ளார்.