India

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக பணிகளுக்கு அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

புதுடெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. ஆலையில் நிர்வாக ரீதியான பணிகளை மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக ரீதியான அலுவலக பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் செல்லலாம் என தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த வாரம் உத்தரவிட்டது. தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்ததையடுத்து ஆலை மூடப்பட்டது. இதனை எதிர்த்து ஆலை நிர்வாகம் சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதில் உள்நோக்கம் உள்ளதால், ஆலையால் மாசு ஏற்படுகிறதா என்பதை ஆராய குழு அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.

இதையடுத்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும், மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் தமிழக அரசின் வாதத்தை நிராகரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ஆலையை திறக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி வேதாந்தா குழுமம் சார்பில் தொடரப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக ரீதியான பணிகளை மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியது. நிர்வாக பணிகளை மட்டும் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆலையை இயக்க அனுமதியில்லை என தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top