12 மாவட்டங்களில் உச்சகட்ட அபாயம் கேரளாவில் ஒரே நாளில் 110 பேர் பலி..

திருவனந்தபுரம்: கேரளாவில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி ஒரே நாளில் 110 பேர் பலியாகினர். இதன் மூலம், இம்மாநிலத்தில் மழை, வெள்ளத்தால் பலியானோர் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்துள்ளது. மேலும், நூற்றுக்கணக்கான மக்களை காணவில்லை. நிவாரண முகாம்களில் 2.5 லட்சம் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டதால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு, ஊருக்குள் புகுந்துள்ளது. இதில், 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு உச்சக்கட்ட அபாயம் நீடிக்கிறது. ஆசியாவின் 2வது மிகப்பெரிய அணையான இடுக்கி அணையின் மொத்த கொள்ளளவு நீர்மட்டம் 2404 அடி, இதில், நேற்று காலை 2402.50 அடியாக நீர்மட்டம் இருந்தது. இதனால், அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஆலுவா, எர்ணாகுளத்தின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது. நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி நேற்று முன்தினம் ஒரேநாளில் மட்டும் 100 பேர் பலியாகி உள்ளனர். நேற்று மேலும் 10 பேர் இறந்தனர். நிலச்சரிவில் சிக்கிய 10க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை. இதன் மூலம், மாநிலம் முழுவதும் மழை, வெள்ளத்தால் பலியானோர் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்துள்ளது. நூற்றுக்கணக்கான மக்களை காணவில்லை. இவர்களின் கதி என்னவானது என தெரியவில்லை. அவர்களை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
எர்ணாகுளம், பத்தினம் திட்டா, திரிச்சூர் மாவட்டங்களில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் முப்படையினரும், தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் ஈடுபட்டுள்ளனர். முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட ஏராளமானோரை நேற்று இப்படையினர் மீட்டனர். ஆலுவா, கலாடி, பெரும்பாவூர், மூவாட்டுபுழா மற்றும் சலகுடி ஆகிய பகுதிகளில் உள்ளூர் மீனவர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திரிச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு மாவட்டங்களில் நேற்று பேய்மழை பெய்தது. பாலக்காடு – திருச்சூர் தேசிய நெடுஞ்சாலையில் குதிரானில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. 1.5 கிமீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்தன. மாநிலம் முழுவதும் பல ஆயிரம் குடும்பங்கள் வீடுகளை இழந்துள்ளன. கேரளாவில் உள்ள உறவினர்களை காப்பாற்றும்படி வெளிநாடுகளில் வசிக்கும் கேரள மக்களும், சமூக இணையதளங்களில் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். ஆலப்புழாவில் தெங்கனூர், குட்டநாடு, கார்த்திகபள்ளி பகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இப்பகுதியில் வீடுகளின் மொட்டை மாடிகளில் தஞ்சம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டனர்.

கேரளாவில் கடந்த 3 வாரங்களில் 38 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது. இடுக்கி மாவட்டத்தில் 84 சதவீதமும், பாலக்காட்டில் 70 சதவீதமும், மலப்புரத்தில் 50 சதவீதமும், கோட்டயத்தில் 47 சதவீதமும் கூடுதல் மழை பெய்துள்ளது. இடுக்கி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் மட்டும் 20 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளது. கேரள முதல்வர் பினராய் விஜயன் கூறுகையில், ‘‘கேரளாவில் கடந்த 17 நாளில் 164 பேர் இறந்துள்ளனர். பத்தனம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர் மாவட்டங்களின் நிலைமை மோசமாக உள்ளது. இந்த மாவட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்பதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. எர்ணாகுளம் இடுக்கி மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த 2 மாவட்டங்களிலும் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
ஆபரேஷன் பாதிப்பு
கேரள மருத்துவமனைகளிலும் வெள்ளம் சூழ்ந்ததால் நோயாளிகளுக்கு செய்யப்பட வேண்டிய அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதே நிலை நீடித்தால், மக்களின் சுகாதார நிலை மேலும் மோசமாகும் என டாக்டர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
பிஎஸ்என்எல் சலுகை
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள வயநாடு, இடுக்கி, ஆலப்புழா, பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் இந்தியாவின் எந்த பகுதிக்கும் இலவசமாக அழைக்கலாம். பிற நெட்வொர்க்குக்கு தினமும் 20 நிமிடம் இலவசமாக அழைக்கலாம். மேலும், தினமும் 500 எம்பி இன்டர்நெட்டும் இலவசமாக வழங்கப்படுகிறது என பிஎஸ்என்எல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
7 மாநிலங்களில் 868 பேர் பலி
நாடு முழுவதும் கேரளா உள்பட 7 மாநிலங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. கேரளாவில் கனமழையால் 247 பேர் பலியாகி விட்டனர். உத்தரபிரதேசத்தில் 191 பேரும், மேற்கு வங்கத்தில் 183 பேரும், மகாராஷ்டிராவில் 139 பேரும், குஜராத்தில் 52 பேரும், அசாமில் 45 பேரும், நாகாலாந்தில் 11 பேரும் என 7 மாநிலங்களில் மொத்தம் 868 பேர் மழைக்கு பலியாகி விட்டனர்.
ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட்
பத்தனம்திட்டா, எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் ஆகிய 8 மாவட்டங்களில் இன்று வரை வெள்ள அபாய (ரெட் அலர்ட்) எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கோட்டயம், அலப்புழா, கொல்லம் ஆகிய மாவட்டங்களில் ‘ஆரஞ்ச் அலர்ட்’ எனப்படும் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு உள்ளிட்ட வடமாவட்டங்களில் மணிக்கு 60 கிமீ வேகத்தில் அடிக்கும் பலத்த காற்றுடன் மழையும் பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கேரளா விரைந்தார் மோடி
டெல்லியில் வாஜ்பாய் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் முடிந்ததும், உடனடியாக நேற்று மாலையே பிரதமர் மோடி விமானம் மூலம் கேரளா புறப்பட்டார். இரவு 11 மணி அளவில் திருவனந்தபுரம் வந்தடைந்த அவர், கவர்னர் மாளிகையில் இரவு தங்கினார். இன்று காலை 8 மணிக்கு அவர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்ய உள்ளார்.
25 ஹெலிகாப்டர் 11 விமானங்கள்
கடற்படை சார்பில் நேற்று 51 படகுகள் அனுப்பி வைக்கப்பட்டு வீரர்கள் அங்கு சென்றுள்ளனர். மேலும், ஆயிரம் உயிர்காக்கும் ஜாக்கெட்டுகள், 1,300 மிதக்கும் படகுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கடலோர காவல்படை சார்பில் 30 படகுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. விமானப்படை சார்பில் 25 ஹெலிகாப்டர்களும், 11 விமானங்களும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ராணுவம் சார்பில் 10 கம்பெனி படைகள், 10 இன்ஜினியரிங் படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கூடுதல் ராணுவம் விரைகிறது
கேரளா வெள்ள நிலவரம் குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை குழு டெல்லியில் அவசரமாக நேற்று 2 முறை கூடி ஆலோசனை நடத்தியது. இதற்கு அமைச்சரவை செயலாளர் பி.கே.சின்கா தலைமை வகித்தார். அப்போது, கேரளா மற்றும் தமிழ்நாட்டின் தலைமை செயலாளர்களை வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடர்பு கொண்டு, வெள்ள நிலவரம் குறித்து கேட்டறிந்தார். கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கி தவிக்கும் பொதுமக்களை மீட்க, கூடுதல் மோட்டார் படகுகள் வேண்டும் என்று கேரள தலைமை செயலாளர் ேகட்டுக் கொண்டார். இதையடுத்து, கேரளாவுக்கு கூடுதலாக ராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர காவல்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினரை அனுப்பி வைக்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. கூடுதலாக மருந்துகள் அனுப்பி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இன்று மீண்டும் கூடி ஆலோசனை நடத்த தேசிய பேரிடர் மேலாண்மை குழு முடிவு எடுத்துள்ளது.
மீட்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணி
எர்ணாகுளம் காலடி அருகே செவ்வரா பகுதியை சேர்ந்த ஜபீல் மனைவி சஜிதா(25). நிறைமாத கர்ப்பிணி. நேற்று இவர்களின் வீடு வெள்ளத்தால சூழப்பட்டது. இதையடுத்து, இவர் செவ்வரா ரயில்நிலையம் அருகே உள்ள பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டார். அப்பகுதியையும் வெள்ளம் சூழ்ந்தது. உடனே மீட்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கேப்டன் விஜயவர்மா தலைமையிலான கடற்படையினர் ஹெலிகாப்டரில் விரைந்து மீட்டனர். உடனடியாக அவர் கொச்சியில் கடற்படை மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறிது நேரத்தில் அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. கர்ப்பிணியை மீட்ட வீரர்களுக்கு பாராட்டுகள் குவிந்தன.
2ம் நாளாக ரயில் சேவை பாதிப்பு
கேரளா முழுவதும் நேற்று 2வது நாளாக ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து ஐதராபாத், டெல்லி உள்பட பல்ேவறு இடங்களுக்கு செல்லும் ரயில்கள் நாகர்கோவில் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. மங்களூர் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. திருவனந்தபுரத்தி–்ல இருந்து ஆலப்புழா வழியாக எர்ணாகுளம் வரை மட்டுமே ரயில்கள் இயக்கப்படுகின்றன. கோட்டயம் வழியாக செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எர்ணாகுளம்- கோழிக்கோடு இடையே நேற்று மாலை வரை ரயில் ேபாக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
நடிகர் ஜெயராம் குடும்பம் மீட்பு
பிரபல நடிகர் ஜெயராம் தனது மனைவி பார்வதி மற்றும் மகள் ஆகியோர் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து திருச்சூருக்கு காரில் சென்றனர். பாலக்காடு – திருச்சூர் தேசிய நெடுஞ்சாலையில் குதிரான் பகுதியில் வந்தபோது திடீர் என்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் இவர்களின் காரும் சிக்கியது. அப்பகுதியில் பல கிமீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்தன. இது குறித்து வடக்காஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று 3 பேரையும் மீட்டு காவல்நிலையம் அழைத்து சென்றனர். பின்னர் வேறு ஒரு காரில் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
உதவி செய்யுங்கள்: பினராய் உருக்கம்
தனது மாநிலத்திற்கு உதவி கேட்டு டிவிட்டரில் கேரள முதல்வர் பினராய் விஜயன் விடுத்துள்ள வேண்டுகோளில், ‘கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் கேரளா மிக மோசமான வெள்ளத்தை சந்தித்துள்ளது. 80 அணைகள் திறக்கப்பட்டுள்ளன. இதுவரை 324 பேர் இறந்துள்ளனர். கேரளா முழுவதும் 52,856 குடும்பங்களை சேர்ந்த 2 லட்சத்து 23 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர். நீங்கள் செய்யும் உதவி அவர்கள் வாழ்க்கையை ஈடு செய்ய உதவும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.