21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் மெரினாவில் கருணாநிதி நல்லடக்கம்

சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்பட முக்கிய தலைவர்கள் மற்றும் லட்சக்கணக்கான பொதுமக்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு அவரது உடல் ஏற்றப்பட்ட ராணுவ வாகனம் மக்கள் வெள்ளத்தில் நீந்தியபடி மெரினா கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அண்ணா சமாதி அருகே ஒதுக்கப்பட்ட இடத்தில் முழு ராணுவ மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. திமுக தலைவர் கருணாநிதி தனது 95 வயதில் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 28ம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். 11 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை 6.10 மணிக்கு காலமானார். பின்னர் அவரது உடல் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி, அவர் வாழ்ந்த இல்லமான கோபாலபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. குடும்பத்தினர் அஞ்சலிக்கு பிறகு நேற்று அதிகாலை மயிலாப்பூரில் உள்ள சிஐடி காலனி இல்லத்தில் கருணாநிதி உடல் சில மணி நேரம் வைக்கப்பட்டது.இதையடுத்து நேற்று அதிகாலை 5.40 மணிக்கு பொதுமக்கள் பார்வைக்காக கருணாநிதி உடல் சென்னை, அண்ணாசாலையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டது. அப்போது, அவரது உடல் மீது திமுக கொடி போர்த்தப்பட்டு இருந்தது.
ராஜாஜி ஹாலுக்கு கருணாநிதி உடல் வந்ததும், நேற்று காலை 6 மணிக்கு முப்படை வீரர்கள் அணிவகுத்து வந்து கருணாநிதி உடல் மீது தேசியக்கொடியை போர்த்தினர். இதைத்தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டது.கருணாநிதி உடல் ராஜாஜி ஹாலுக்கு கொண்டு வரும் முன்பே அங்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அங்கு கூடியிருந்தனர். உடல் வந்ததும் அங்கு கூடி இருந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் தலைவா… தலைவா என்று கூறி கதறி அழுதனர். மறைந்த கருணாநிதியின் முகத்தை எப்படியாவது ஒருமுறை பார்த்துவிட வேண்டும் என்று முண்டியடித்துக் கொண்டு அஞ்சலி செலுத்த வந்தனர். அவர்களை கட்டுப்படுத்த போலீசார் திணறினர். ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உடலுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட பல்வேறு மாநில முதல்வர்கள், தமிழக மற்றும் அகில இந்திய அளவிலான அரசியல் கட்சி தலைவர்கள், விஐபிக்கள், நடிகர்கள், நடிகைகள், பொதுமக்கள் அணி அணியாக வந்து மலர்வளையம், மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்திவிட்டு, கருணாநிதி உடல் அருகே நின்றிருந்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஆறுதல் கூறி விட்டு சென்றனர்.
சரியாக நேற்று காலை 6.05 மணியில் இருந்து மாலை 3.30 மணி வரை பொதுமக்கள் மற்றும் தலைவர்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டது. அதன்பிறகு 3.55 மணி வரை கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் கருணாநிதி உடல் அருகே நிற்க அனுமதி அளிக்கப்பட்டது. குடும்பத்தினர் அங்கு கதறி அழுதனர். முன்னதாக நேற்று மாலை 3 மணிக்கு, கருணாநிதி உடல் நல்லடக்கம் செய்யும் இடத்துக்கு எடுத்துச்செல்ல மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனம் ராஜாஜி ஹாலுக்குள் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. சரியாக 3.50 மணிக்கு 30க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கருணாநிதி உடல் அருகே வந்தனர். இதையடுத்து, கருணாநிதி உடல் அருகே காலையில் இருந்து பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்ட தமிழக போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். பாதுகாப்பு பணி முடித்து செல்லும்முன், அனைத்து காவலர்களும் கருணாநிதி உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி விட்டு சென்றனர். இந்த காட்சி, அங்கு இருந்தஅனைவரையும் கண்கலங்க வைத்தது.
சரியாக நேற்று மாலை 3.55 மணிக்கு முப்படை வீரர்கள் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு இருந்த கருணாநிதியின் உடலை சுமந்து கொண்டு ராணுவ வாகனத்திற்கு கொண்டு சென்று ஏற்றினர். அப்போது, ராஜாஜி ஹாலை சுற்றியிருந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதைத்தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி பயணம் ராணுவ வாகனத்தில் சரியாக 4.05 மணிக்கு ராஜாஜி ஹாலில் இருந்து புறப்பட்டது. ராணுவ வாகனத்துக்கு பின்னால் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழரசு, தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் நடந்து சென்றனர்.கருணாநிதி உடலை சுமந்து கொண்டு பயணம் செய்த ராணுவ வாகனம் இறுதி ஊர்வல பாதையான சிவானந்தா சாலை, அண்ணாசாலை, வாலாஜா சாலை, அண்ணாசதுக்கம் உள்ளிட்ட பகுதியின் இரண்டு பக்கங்களில் கூடி இருந்த லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் நீந்தியபடியே வந்தது. சரியாக மாலை 6.15 மணிக்கு அண்ணா சதுக்கம் அமைந்துள்ள வளாகத்துக்கு கருணாநிதியின் உடல் வந்தடைந்தது. ராஜாஜி ஹாலில் இருந்து அண்ணா சதுக்கம் வரை சுமார் 2 கி.மீ. தூரத்தை கருணாநிதியின் உடலை சுமந்து வந்த ராணுவ வாகனம் கடக்க 2 மணி 10 நிமிட நேரம் ஆனது.
அண்ணா சதுக்கம் வந்த கருணாநிதியின் உடலை ராணுவ வீரர்கள் வாகனத்தில் இருந்து இறக்கினர். பின்னர் முப்படை வீரர்கள் அணிவகுப்பு மற்றும் வாத்திய இசையுடன் கருணாநிதி உடல் நல்லடக்கம் செய்யப்படும் இடத்துக்கு முழு அரசு மரியாதையுடன் எடுத்து வரப்பட்டது. கருணாநிதி உடல் மீது இருந்த கண்ணாடி பேழையின் மேல்பகுதியை ராணுவ வீரர்கள் எடுத்தனர். பின்னர் அவரது உடலுக்கு இறுதி வணக்கம் செலுத்தியதும் விமானப்படை, கப்பல் படை, தரைப்படை தளபதிகள் கருணாநிதி உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் தேவகவுடா, ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், தமிழக அமைச்சர் ஜெயக்குமார், மத்திய அமைச்சர்கள் ராம்தாஸ் அத்வாலே, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து ராணுவ வீரர்கள் தங்களது துப்பாக்கியை தலைகீழாக பிடித்து சல்யூட் அடித்து ராணுவ இசை முழங்க மரியாதை செலுத்தினர். பின்னர் முப்படை வீரர்களும், அங்கிருந்த ராணுவ அதிகாரிகளும் எழுந்து சல்யூட் அடித்து, இசை முழங்க மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழக ஐஏஎஸ் அதிகாரி அமுதா, கருணாநிதி உடல் அருகே அழைத்து வந்தார். அப்போது அங்கு தயாராக இருந்த ராணுவ வீரர்கள் கருணாநிதி மீது போர்த்தப்பட்டு இருந்த தேசியக்கொடியை முறைப்படி அகற்றி மடித்து மு.க.ஸ்டாலினிடம் வழங்கினர். அவர் அதை கண்கலங்கியபடி பெற்றுக் கொண்டார். தொடர்ந்து திமுக குடும்பத்தினர் கருணாநிதி உடல் மீது பூக்களை தூவி கண்ணீர் மல்க இறுதி மரியாதை செலுத்தினர். திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனை, மு.க.ஸ்டாலின் கருணாநிதி உடல் அருகே அழைத்து வந்தார். அவரும் கருணாநிதி உடலுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.இதைத்தொடர்ந்து ராணுவ வீரர்கள் கண்ணாடி பேழையில் இருந்த கருணாநிதி உடலை தூக்கி அருகில் இருந்த சந்தன பேழையில் வைத்தனர். அப்போது அவரது உடலில் திமுகவின் கறுப்பு, சிகப்பு கொடி போர்த்தப்பட்டு இருந்தது. கருணாநிதி உடல் வைக்கப்பட்டு இருந்த சந்தன பேழையை மூடும் முன், இறுதியாக அவரது முகத்தை அழகிரி, ஸ்டாலின், தமிழரசு, செல்வி, கனிமொழி, கலாநிதி மாறன், தயாநிதி மாறன், முரசொலி செல்வம், மல்லிகாமாறன், அமிர்தம் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் பார்த்து கண்கலங்கி கதறி அழுதனர்.கருணாநிதி உடல் வைக்கப்பட்டு இருந்த சந்தன பேழையை ராணுவ வீரர்கள் மாலை 6.58 மணிக்கு மூடினர். தொடர்ந்து கருணாநிதி உடல் வைக்கப்பட்டு இருந்த சந்தன பேழை சரியாக 7 மணிக்கு தயாராக இருந்த குழியில் இறக்கப்பட்டது. அப்போது ராணுவ வீரர்கள் 21 குண்டுகள் முழங்க கருணாநிதி உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
இதைப்பார்த்த அங்கிருந்த திமுக தொண்டர்கள், பொதுமக்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்கலங்கினர். தொடர்ந்து, கருணாநிதியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரது குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் கருணாநிதி உடல் வைக்கப்பட்டிருந்த குழிக்கு மண்தூவி தங்களின் கடைசி இறுதி அஞ்சலியை செலுத்தி விட்டு கண்ணீருடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.இறுதி அஞ்சலியில் பங்கேற்ற லட்சக்கணக்கான திமுக தொண்டர்களில், “அண்ணாவின் அருகில் ஓய்வெடுக்க கருணாநிதி சென்றுவிட்டார்” என்று கூறி கதறி அழுதபடி மெரினா கடற்கரையில் இருந்து தங்கள் வீடுகளுக்கு இரவு 7 மணிக்கு மேல் புறப்பட்டு சென்றனர்.
விரும்பி பயன்படுத்திய பொருட்களுடன் நல்லடக்கம்
திமுக தலைவர் கருணாநிதி விரும்பி அணியும் கண்ணாடி, மஞ்சள் துண்டு, திமுக கரை வேட்டி, கர்சிப், அண்ணா அணிவித்த மோதிரம், இங்க் பேனா என்று அவர் வழக்கமாக அணியும் பொருட்களுடன் அடக்கம் செய்யப்பட்டார்.