அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தில் கனடா ஒருபோதும் கைச்சாத்திடாது! ஜஸ்ரின் ட்ரூடோ

அமெரிக்காவுடனான வட அமெரிக்க சுகந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கனடா ஒருபோதும் கைச்சாத்திடாது என கனடா பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவுடனான வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை புதுப்பிப்பது தொடர்பான பேச்சுவார்த்தையின் முக்கிய கோரிக்கைகளை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என, கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்
பிரிட்டிஷ் கொலம்பியாவில் நேற்று ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும், 1988ஆம் ஆண்டின் கனடா அமெரிக்கா சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் இரு தூண்களாக விளங்கும் சர்ச்சைகளை தீர்ப்பதற்கான பொறிமுறை மற்றும் கலாசார பொருட்களுக்கு விலக்களித்தல் போன்றவற்றை உள்ளடக்காத ஒரு ஒப்பந்தத்தில் கனடா கைச்சாத்திடாது என்றும் தெரிவித்தார்.
அவ்வாறான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டால் அது தமது இறையாண்மை மற்றும் அடையாளத்தை விட்டுக் கொடுப்பதற்கு சமமாகும் எனவும் குறிப்பிட்டார். இதேவேளை, கனடாவிற்கு ஆபத்தான விடயத்தை தாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றும் கலாசார பொருட்களுக்கான விலக்கை நீக்குவது கனேடியர்களுக்கு ஆபத்தான விளைவை ஏற்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டினார்.